அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் மோடியும் வானொலியில் கூட்டாக உரையாற்றினர். வானொலி உரை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்தியாவை விட்டுகிளம்பிய சில மணி நேரங்களிலேயே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒபாமா இணைந்து வழங்கிய உரை வானொலியில் ஒலிபரப்பப் பட்டது. இந்த உரை நேற்று டெல்லி அகில இந்திய வானொலியால் பதிவு செய்யப்பட்டது.

அதில் இருந்து சிலபகுதிகள் வருமாறு:–பிரதமர் நரேந்திர மோடி

கடந்த சில மாதங்களாக உங்களுடன் நான் உரையாடி வருகிறேன். இன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உங்களுடன் பேசுவதற்கு என்னுடன் இணைந்துள்ளார்.

ஸ்வாஹிலி மொழியில் பராக் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பொருள்.

ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் நான் இருப்பது நம்மால் என்று கூறுவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் உள்ள வசுதைவகுடும்பகம் (உலகமே எங்கள் குடும்பம்) என்பதற்கு இணையானது இது.

நாம் மார்ட்டின் லூதர் கிங் அல்லது ஒபாமா பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் மகாத்மா காந்தியிடம் இருந்துபெற்ற உத்வேகத்தைப் பற்றி நமக்குக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமாவின் வாழ்க்கையில் அவர் தன் புதல்விகளை ஊக்குவித்து வளர்த்தது நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கும். 'பேட்டி பச்சாவ்பேட்டி படாவ்' பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.

ஒபாமாவிடம் நான் ஒன்றைக் கூறவிரும்புகிறேன். இந்தியாவுக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் இந்தியா எப்போதும் அன்புடன் வரவேற்கும்.

முதன் முதலாக நான் அமெரிக்க நாட்டுக்கு விஜயம் செய்த போது, ஒபாமாவும் நானும் வெள்ளை மாளிகையின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இப்போது நான் பிரதமரான பிறகு அந்தப்புகைப்படம் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.

நான் வெள்ளை மாளிகைக்கு சென்ற போது பராக் எனக்கு ஒருபுத்தகத்தை கொடுத்தார். அது சுவாமி விவேகானந்தர் 1894ம் ஆண்டில் உலக மதங்களின் சம்மேளனத்தின் போது ஆற்றிய உரைகளின் தொகுப்பாகும்.

"நான் சுவாமி விவேகானந்தர் வருகைபுரிந்த சிகாகோ நகரில் இருந்து வந்தவன்' என்று என்னிடம் அவர் மிகவும் பெருமையுடன் கூறினார்.

ஒரு தேனீர்விற்பவன் பிரதமராக முடியும். விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்த பெண்மணியால் வளர்க்கப்பட்ட ஒருமகன் தன்னுடைய நாட்டின் ஜனாதிபதியாக முடியும். இது நம்முடைய இருநாடுகளிலும் கிட்டும் அபரிமிதமான வாய்ப்புக்களை நிரூபிக்கும் விஷயமாகும்.

கம்யூனிஸ்டுகள் கூறுவார்கள் உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று. இன்று நான் நினைக்கிறேன். இது 'இளைஞர்களே இந்த உலகத்தை ஒன்று படுத்துங்கள்' என்றுதான் இருக்க வேண்டும்.

பெஞ்சமின் பிராங்ளின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவருடைய சிந்தனைகள் இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

நீங்களும் அவரைப்பற்றி வாசித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு உத்வேகம் பெறுவீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய உரையை 'நமஸ்தே' என்று கூறி தொடங்கினார். அவர் பேசியதாவது:–

இந்தியாவும் அமெரிக்காவும் பங்காளிகள். ஏனெனில், நம்முடைய இரு நாடுகளுக்கு இடையில் பல வகையிலும் பொதுவான அம்சங்கள் உள்ளன.

பெருமைகொள்ளும் அளவு பல லட்சக்கணக்கான இந்திய அமெரிக்கர்களால் நாம் இணைக்கப்பட்டுள்ளோம்.,முதன் முறையாக இந்தியப் பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் ரேடியோ உரை இது என்று என்னிடம் கூறப்பட்டது.

என்னுடைய மகள்கள் எங்களுடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டார்கள். இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாட்டினால் அவர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளார்கள்.

எங்கள் மூத்த மகள் மலியாவுக்கு தேர்வுகள் இருந்தன. நான்மீண்டும் அமெரிக்கா திரும்பியதும் என் மகள்களிடம் கூறுவேன் நீங்கள் கற்பனை செய்தபடியே இந்தியா பிரம்மாண்டமான நாடு என்று.

கண்டிப்பாக ஷாப்பிங் செய்ய வேண்டும். நான் போக மாட்டேன். ஆனால் என்னுடைய குழுவினர் சென்று வருவார்கள். இதுகுறித்து மிஷெல்லிடம் ஆலோசனை பெறுவேன்.

இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களுடன் பரந்த அளவில் உடல்பருமனாதல் உள்ளிட்ட பொது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து கூட்டாகசெயல்படும் வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன். மிஷெல் ஆற்றிய பணிகள் குறித்து மிகவும் பெருமையாக இருக்கிறது.

இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கு, உயர்கல்விக்கு அழுத்தம் தருவது மிகவும் அவசியமாகிறது. அது தான் ஒரு நாட்டின் உண்மையான வலிமையாகும்.

அரசாங்கங்களும், தலைவர்களும் வெறுமனே ஆளுவதை பற்றிமட்டுமே நினைக்க கூடாது. அவர்கள் அனைத்து வழிகளிலும் மக்களை சென்றடையவேண்டும். மக்களுடன் மனம் திறந்த உரையாடல்களை நிகழ்த்தவேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் பணிகளில் சிரமமான, மோசமான நாட்களை சந்தித்து இருக்கக்கூடும். அதற்கு இடையிலும் நாம் பணியாற்றவேண்டும். யாராலும் இதுவரை தீர்வு காணாதகாத கேள்விகளே எனக்கு முன்பு எழுகின்றன.

மிகவும் கடுமையானதும் சலிப்பு தரும் நாட்களும் உண்டு. ஆனால் தங்களின் வாழ்க்கையில் என்னால் சில மாற்றங்கள் நேர்ந்தது என்று சொல்லும்யாராவது ஒருவரையாவது நான் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறேன்.

நீங்கள் யாருக்காவது உதவினால், அந்த உணர்வு அளிக்கும் திருப்தியானது எல்லாவற்றையும் மிஞ்சி விடுகிறது. இதுதான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

Leave a Reply