பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்ட போதிலும், வாந்தி எடுத்தபோதிலும் தொடர்ந்து சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். பலரும் வாந்தி அதிகமாக இருக்கிறதே வயிற்றுப்போக்கு அதிகமாக உள்ளதே தொடர்ந்து உணவு கொடுத்தாலும் அது வாந்தியாக வெளியேறிவிடும் வயிற்றுப்போக்காகச் சென்றுவிடுமே எனக்கருதி உணவைக் கொடுப்பதில்லை. இது மிகவும் தவறான எண்ணமாகும்.

வயிற்றுப்போக்கின் போது உடலில் இருந்து அதிகளவு நீர்ச்சத்து வெளியேறிவிடுகிறது. அதேபோன்று உப்புச்சத்து இழப்பும் ஏற்படும். அந்த நேரத்தில் உடலில் செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காவிட்டால் உடல் மேலும் பலவீனமடையும். ஆகவே, வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து அதைச் சிகிச்சை செய்கின்ற அதே வேளை நீர் இழப்பையும், உப்புச் சத்து இழப்பையும் சாரிசெய்து உடல் செல்களுக்குச் சக்தி அளிக்கத் தேவையான உணவு வகைகளை தொடர்ந்து கொடுத்துவர வேண்டும்.

பலரும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்ற போது குழந்தைகளுக்குத் தரும் பாலை நிறுத்திவிடுகிறார்கள். இது பெரிய தவறு. அவர்களுக்குத் தொடர்ந்து பால் கொடுத்துவர வேண்டும்.

நீர் இழப்பைச் சரிசெய்ய வீட்டிலேயே பல்வேறு பானங்களையும் தயார் செய்து கொடுக்கலாம்.

கஞ்சித் தண்ணீர், பருப்புத் தண்ணீர், தயிர், லஸ்சி, எலுமிச்சைச் சாறு, சூப்பு வகைகள், இளநீர், பல்வேறு பழரசங்கள் ஆகியவற்றை அடிக்கடி கொடுக்கலாம். சாதாரண காய்ச்சி சுத்தமாக வடிகட்டிய நீரில் மூன்று சிறிய கரண்டியில் சர்க்கரையும், ஒரு பங்கு உப்பும் கலந்து "சர்க்கரை உப்புக் கரைசல்" கொடுக்கலாம்.

பிறகு அரசாங்க மருத்துவமனைகளில் தரப்படும் ஒ.ஆர்.எஸ். எனப்படும் மருந்தினைத் தரலாம். இதில் சோடியம் குளோரைடு, பொட்டாஷியம் குளோரைடு, சோடியம் சிட்ரேட், மற்றும் குளுக்கோஸ் ஆகியவை அடங்கி இருக்கும்.

ஒரு பாக்கெட்டிலுள்ள பொடியை அப்படியே ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் மாதம் 7 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 50மி.லி. முதல் 100மி.லி. வரை கொடுக்கலாம். 6 மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு 50மிலி வீதமும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மிலி வரையும் தரலாம்.

ஒவ்வொரு முறையும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகும் இதே அளவில் இந்தப் பொடியின் கரைசலைக் கொடுக்க வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட பொடிக் கரைசலை அன்றே கொடுத்துத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால், அதை அப்புறப்படுத்திவிட வேண்டும். அதே கரைசலை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மேற்கூறிய முறைப்படி நீர் மற்றும் உப்புச்சத்து ஆகியவற்றைச் சரிசெய்யக் கொடுப்பதுடன் எளிதில் ஜீரணமாகக் கூடிய அதிகக் காரமில்லாத உணவுகளைத் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

அதிகக் கொழுப்பான உணவு, மது வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். "மதுவகைகள்" பல்வேறு நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடலின் பகுதியை மேலும் பாதிக்கும், அத்துடன் பல்வேறு 'அமீபா' போன்ற கிருமிகளால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் "மெட்டிரானிட ஷோல்" மற்றும் "டினிடஷோல்" ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கும்போது மது அருந்தும் போது அதிக வாந்தி, வயிற்றில் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், வாழைப்பழம் ஆகியவற்றை இவர்களுக்குத் தொடர்ந்து கொடுக்கலாம்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.