லாலா லஜபதிராய் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா மாவட்டத்தில், ஜக்ரவுன் எனும் ஊரில் அகர்வால் என்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் லாலா இராதாகிருஷ்ணன் அரசினர் பள்ளியில் உருது ஆசிரியராகப் பணியாற்றினா. தந்தையார் வறுமை நிலையிலிருந்ததால், தன் மகன் லஜபதிக்குக் கல்லூரியில் படிக்க மாதம் எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை தான் செலவிட முடிந்தது.

பல்கலைக் கழகத்தின் உதவியோடு, பல வேளை உணவின்றிப் படிப்பைத் தொடர்ந்தார். அந்த நிலையிலும் நாட்டிற்கும், மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்தது. சட்டம் பயின்று ஏழை எளியமக்களின் இன்னலைத் தீர்க்க வழக்கறிஞரானார்.

இளமையிலேய ஆரிய சமாசப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்தக் கொள்கைகளைத் தம் பேச்சிலும் எழுத்திலும் கடைப் பிடித்தார். காங்கிரசு இயக்கம் தீண்டாமையை அகற்றப்பாடுபடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரிய சமாசம் பாடுபட்டது. அதனால் லாலா லஜபதியின் மனதில் தீண்டாமை என்ற கொடிய நஞ்சு பரவவில்லை.

சுவாமி தயானந்த சரசுவதியின் நினைவைப் போற்றும் வகையில் லஜபதிராய் இரண்டு மணிநேரம் இரங்கல் உரை ஆற்றினார். அவ்வுரையே அவரைத் தலைச்சிறந்த சொற்பொழிவாளராக மக்களுக்கு அறிமுகம் செய்தது. சுவாமி தயானந்த சரசுவதியின் நினைவாக, தயானந்தர் ஆங்கிலோ வேதக் கல்லூரியை நிறுவினார். பஞ்சாபில் பல்வேறு இடங்கில் தயானந்தரின் பெயரால் ஆடவர், மகளிர் உயர்நிலைப் பள்ளிகளைத் தோற்றுவித்தார்.

அப்பள்ளிகளில் தேசிய கல்வியைப் போதித்தார். பஞ்சாபில் கல்விச் சங்கத்தை உருவாக்கினார் தான் பிறந்த கிராமத்தில் தன் தந்தையின் பெயரால் உயர்நிலைப் பள்ளியை அமைத்தார். தன்னுடைய வருவாயில் ஒரு பகுதியைக் கல்வியைப் பரப்பச் செலவிட்டார்.

இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா முதலாக நாடுகளுக்குச் சென்ற பொது, அங்குள்ள பள்ளிக் கூடங்களையும், பல்கலைக் கழகங்களையும் கண்டு, இந்தியா திரும்பினார். தாய்நாட்டின் கல்வியைக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்தார். கல்விக் கூடங்களில் பண நெருக்கடி ஏற்பட்ட போது, நலிவுற்ற தனது உடல் நலத்தையும் கருதாமல், ஊர் ஊராக அழைந்து பொருள் திரட்டித்தந்தார்.

தன் சொந்த உழைப்பினால் ஈட்டிய ஐம்பதினாயிரம் ரூபாயைக் கல்வி வளர்சிக்குக் கொடுத்தார். பஞ்சாப் மாநிலக் கல்வி நிருவாகக் குழுவில் ஆறு ஆண்டுகள் துணைத் தலைவரகவும், பனிரெண்டாண்டுகள் செயலாளராகவும் பணியாற்றினார். சில சந்தர்ப்பங்களில் வரலாற்று ஆசிரியராக இருந்து பாடங்களைக் கற்பித்துள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட கல்விக் கூடங்களில் தாய் நாட்டுப் பற்றும், தாய் மொழிப் பற்றும் கற்பிக்கப்பட்டன. நாட்டிலுள்ள மற்ற கல்விக் கூடங்களில் ஆங்கிலேயருக்கு அடிமையாகும் கல்வி கற்பிக்கப்பட்டன.

மாணவர்களுக்குக் கல்வியை ஊதியமின்றிக் கற்பிக்க வேண்டுமென்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். அரசின் ஒத்துழைப்புக் கிடைக்காததால், இவரது கல்விக் கூடங்களில் பணியாற்றியவர்கள் பாதி ஊதியம் பெற்றே பணி புரிந்தனர். லார்டு கர்சன் பிரபு அமைத்த கல்விக்குழு இவரது கல்வித் தொண்டினைச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளது.

கல்வி பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட லஜபதிராய், நாட்டின் அடிமை விளங்கை முறியடிக்கும் பணியில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். 1888-ம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசின் நான்காவது மாநாட்டில் முதன் முதலாகக் கலந்து கொண்டார். 1905 –இல் இந்திய மக்களின் நிலைமையை எடுத்துரைக்க இந்திய தேசியக் காங்கிரசின் பிரதிநிதியாக கோபால கிருஷ்ண கோகலேயுடன், லாலா லஜபதிராய் இங்கிலாந்து சென்றார்.

1907-ல் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். காங்கிரசின் ஒப்பற்ற தலைவர்களாக விளங்கிய தாதாபாய் நவரோஜி, விபின் சந்திர பாலர், சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோசா மேத்தா, பால கங்காதர திலகர் முதலானவர்களின் நட்பைப் பெற்றார். வாரணாசியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் ஆற்றிய உரைக்குப்பின் நாடறிந்த தலைவராக மதிக்கப் பெற்றார். திலகரோடும், விபின் சந்திரபாலரோடும், இவரை இணைத்து லால் பால் பால் என மக்கள் அன்புடன் அழைத்தனர்.

1907-ல் பஞ்சாப் அரசு தண்ணீர் வரியை உயர்த்தியது அதனை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அரசின் போக்கைக் கண்டித்து, கையல்பூரில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாகக் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்து மியான்மார் நாட்டிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்தது. இந்தக் கொடுமையை கண்டு மனம் கொதித்த பைந்தமிழ்க் கவிஞர் பாரதி,

'எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையிலிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந்தனில் வைத்தால் வாடுகிலேன்'
என்று பாடியுள்ளார். இந்தியாவிலிருந்து மியான்மாருக்குக் கடத்திய செய்தியை, சிறையிலிருந்த போது, 'என் நாடு கடத்தல் வரலாறு' என்ற நூலினை எழுதினார். 1914-ல் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றார். முதல் உலக போர் தொடங்கி விட்டதால், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பாமல், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்றார். அந்த நாடுகளில் ஆறு ஆண்டுகள் தங்கி இந்தியாவின் நிலையை அங்கு சொற்பொழிவின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தம் நாட்டு மக்களும், அம்மக்களைப் போலக் கல்வியிலும், தொழிலிலும் சிறந்த விளங்க வேண்டுமென விரும்பினார். இங்கிலாந்து சென்ற தன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆயினும், அந்த நாடுகளில் பல நண்பர்களைப் பெற்றார். அங்கெல்லாம் இந்தியா ஹோம் ரூல் கழகத்தை நிறுவினார்.

1920-ல் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு செப்டம்பர் திங்களில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் லாலாலஜபதிராயும், சித்தரஞ்சன்தாசும், காந்தியடிகளின் ஒத்துளையாமைத் திட்டத்தை எதிர்த்தனர். பின் நாகபுரியில் கூடிய கூட்டத்தில் ஒத்துழையாமைக் கொள்கையை மக்களிடையே பரப்ப 'வந்தே மாதரம்' என்ற உருது மொழி இதழைத் தொடங்கினார்.

பஞ்சாபில் மக்கள் வறுமையின் கொடுமையால், தாம் பெற்ற குழந்தையை விலைகூறி விற்றனர். வயிற்றுப் பசியைப் போக்கப் பஞ்சாபில் பல குடும்பங்கள் கிறித்துவ மதத்தில் சேர்ந்தன. பசித் துயரால் துடித்த ஆயிரக் கணக்கான குடும்பங்களைக் காக்க அனாதை விடுதிகளை அமைத்தார். பல ஆசிரமங்களை உருவாக்கினார்.

மக்களுக்குத் தொண்டு செய்யப் பயிற்சி அளிப்பதற்காக மக்கள் பணியாளர் கழகத்தை உருவாக்கினார். காச நோயால் துன்புற்றவர்களுக்கு, குலாப் தேவி என்ற பெயரில் மருத்துவமனையை அமைத்தார். பஞ்சாபில் மதன்மோகன் மாலவியாவுடனும், சுவாமி சிரத்தானந்தருடனும் இணைந்து, இந்து மகாசபையைத் தோற்றுவித்து, அதன் தலைவரானார்.

அரசியலிலிருந்து ஒதுங்கி இந்துக்களுக்குப் பணி செய்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டுமென விரும்பினார். இந்து மதத்தில் படிந்துள்ள மூட நம்பிக்கைகளைக் கடிந்தார். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்தில் இணைத்தார்.

இந்து மதத்திற்கே கறையாகவுள்ள சாதிவேறுபாடு, தீண்டாமை ஆகிய கொடுமைகளைச் சாடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடப்போவதாக அறிவித்தார். குழந்தை திருமணத்தைக் கண்டித்தார். விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தார். சமுதாயப் பிணிகளை அகற்றும் மருத்துவராக விளங்கினார்.

இளமையிலேயே பேச்சிலும், எழுத்திலும் சிறந்து விளங்கிய அவர், பத்திரிக்கை வாயிலாக நாட்டுப் பற்றையும், நல்லுணர்வையும், ஊட்டினார். 'வந்தே மாதரம்' என்ற உருது நாளிதழையும், 'மக்கள்' என்ற ஆங்கில வார இதழையும், 'இளைய பாரதம்' என்ற திங்கள் இதழையும் நடத்தினார். 'ஆரிய சமாசம்', 'இளம் இந்தியா', 'இந்தியாவின் அரசியல் எதிர்காலம்', முதலான நூல்களைப் படைத்தார்.

சைமன் தலைமையில் மூவர் குழு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த போது, அக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம் பெறாததைக் கண்டு, நாடெங்கும் பெரும் கிளர்ச்சிகள் தோன்றின. அக்குழுவிற்குக் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பரித்தனர். சைமன் தலைமையில் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20-ஆம் நாள் அக்குழுவினர் லாகூர் வந்த போது, லஜபதிராயின் தலைமையில் மக்கள் கூடிக் கருப்புக் கொடி காட்டினர்.

அந்தச் சமயம் சாண்டர்ஸ் என்ற காவல் துறை உயர் அதிகாரியால் லஜபதிராய் தடியால் அடித்திட குருதி பெருக்கெடுத் தோடியது. அந்தத் தடியடியால் ஏற்பட்ட புண் ஆறாத நிலையில் உடல் நலிவுற்றார். என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கல்லறை மீது அறையப்படும் ஆணியாகும் எனக் கூறினார். நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த அவர் 1928-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ஆம் நாளில் காலமானார்.

லஜபதிராயைக் கொடூரமாகத் தாக்கிய வெள்ளைக்கார அதிகாரி சாண்டர்சனை, பகத் சிங், ராஜகுரு, சந்திர சேகர ஆசாத் ஆகிய மூவரும் காவல் நிலையத்திற்குள் சென்று சுட்டுவித்தனர். லாலாலஜபதிராய் மறைந்தாலும், அவர் ஊட்டிய விடுதலை உணர்வு பஞ்சாபில் கொழுந்து விட்டு எரிந்தது.

லாலாலஜபதிராய் கல்விப் பணியையும், சமூகப் பணியையும் இரு கண்களாகப் போற்றினார். மக்களின் அறியாமையும் வறுமையையும் அகற்ற ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட்டார். இந்திய நாட்டின் விடுதலைக்கும், இந்திய சமுதாய நல்வாழ்விற்கும் பாடுபட்ட இவருடைய வரலாறு, இந்திய வரலாற்றில் அழியாத நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.

வந்தே மாதரம்!

நன்றி : செல்வி சிவக்குமார்.
.

Leave a Reply