இந்தியாவின் 'இரும்பு மனிதர்' எனவும் நவீன இந்தியாவின் 'பிஸ்மார்க்' எனவும் எல்லோராலும் அழைக்கப் பெற்றவர். இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகளுக்குப் பெருந்துணையாக நின்ற சர்தார் வல்லபாய் படேல் ஆவார். இவர் அஞ்சா நெஞ்சமும் செயலாற்றும் திறனும் மிக்கவர். எண்ணியதை எண்ணியவாறே செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்.

பிறப்பும் இளமையும்
இத்தகைய சிறப்புகள் பொருந்திய வல்லபாய் படேல் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31-ஆம் நாள் குஜராத் மாநிலம் கரம்சாத் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் சாவேரிபாய் படேல் ஒரு குடியானவர். தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்ட காரணத்தால், இவரால் கல்வி கற்பதில் வேகம் காட்ட இயலவில்லை. எனினும், நாடியாத் என்ற இடத்தில் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் வழக்கறிஞர் தொழிலுக்கு முயன்று படித்துத் தேறினார்.

வல்லபாய் படேல் அவர்களின் மூத்த சகோதரரான விதல்பாய் படேல் அவர்களும், சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் என்பதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று அரும்பணி ஆற்றியுள்ளார் என்பதும் அறியத்தக்க செய்திகளாகும்.

படேல் 1901-ஆம் ஆண்டு முதல் கோத்ரா என்ற ஊரில் வழக்கறிஞர் தொழில் நடத்தினார். பின்னர் அதே ஆண்டில் "பாரிஸ்டர்" பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். 1913- ஆம் ஆண்டு தாயகம் திரும்பி, அகமதாபத்தில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில், சிறந்த வழக்கறிஞர் எனப் புகழ் பெற்றனர்.

தொடக்கத்தில் போராட்டங்களில் ஆர்வம் காட்டாத படேல், நாளடைவில் காந்தியடிகளின் சீரிய குறிக்கோளை உணர்ந்து, விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1917- ஆம் ஆண்டு பீகாரில் உள்ள சம்பரான் மாவட்டம் அவுரித் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைப் போக்குவதற்காகத் தொடங்கிய போராட்டதில் சேர்ந்தார்.

1918-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது, மகாத்மாவின் விருப்பதிற்கேற்பத் தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்றார். 1923- ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற கொடிப் போராட்டத்தில் பங்கேற்றார். 1928-ஆம் ஆண்டு பர்தோலியில் நிலவரி உயர்வை எதிர்த்து நடைபெற்ற அறப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி, வெற்றி பெற்றார். அச்சமயத்தில் படேலின் ஆற்றலைப் போற்றிப் பாராட்டிக் காந்தியடிகள் அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை வழங்கினார்.

சட்ட மறுப்பு இயக்கம்
1930 – ஆம் ஆண்டு காதியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர்ந்து, முதன் முறையாக கைது செய்யப்பட்டார்.

காங்கிரசுத் தலைவர்
1931-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசுத் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
1940-ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சட்டமறுப்பு இயக்கத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு, மருத்துவக் காரணங்களால், அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

கிலாபத் இயக்கம்
முதல் உலகப் போர் முடிவுற்றதும் இஸ்லாமிய உலகின் தலைவரான துருக்கி அதிபர் காலிப் அவர்களைத் தலைவராக ஏற்க ஆங்கில அரசு மறுத்தது. எனவே, அவரது தலைமையைப் பாதுகாக்கும் பொருட்டு உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தீவிர இயக்கம் ஒன்றை நடத்தினர் இந்தியாவின் அவ்வியக்கம் 'கிலாபத்' இயக்கம் என்று அழைக்கப் பெற்றது.

வல்லபாய் படேல் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் விரும்பிய காரணத்தால், காந்தியடிகளுடன் கிலாபத் ஆதரவு இயக்கத்தில் ஈடுபட்டார்.

"வெள்ளையனே வெளியேறு"
பம்பாயில் 1942 – ஆகஸ்ட் 8- ஆம் நாள் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானம் நிறைவேறியது. அச்சமயம் காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்டு 9 ஆம் நாள் படேல் கைதானார். அகமது நகர் கோட்டைச் சிறையில் 1945 ஜூன் மாதம் வரை இருந்தார்.

இடைக்கால அமைச்சரவை
1946 –ஆம் ஆண்டு ஜவகர்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்று, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1946 – 47 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் கற்கும், இந்தியத் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் படேல் பங்கேற்றார்.

துணைப் பிரதமர்
1947 – ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற போது படேல் இந்தியாவின் துணைப் பிரதமரானார். அவரிடம் 'உள்துறை'ப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

படேலின் சாதனைகள்
இடைக்கால அரசில் உள்துறைப் பொறுப்பேற்ற படேல், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்து. அவற்றை எல்லாம் தம் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அந்த அளவுக்குத் தெளிவும், துணிவும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

1947 – ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றபின், ஆங்கில அதிகாரிகளில் பெரும்பாலோர் வெளியேறிய போது, படேல் அப்பதவிகளில் தகுதி வாய்ந்த இந்தியர்களை நியமித்தார். நிர்வாகத்தைச் செம்மைப் படுத்தும் பொறுப்பை ஏற்றுத் திறமையாகத் தம் பணிகளைச் செய்தார்.

ஒருமைப்பாடு
இவர் இந்திய ஒருமைப்பாட்டைக் கருதி, சுதேச மன்னர்களிடமிருந்து பகுதிகளை எல்லாம் இந்தியாவுடன் இணைக்கும் பணியை முறையாகவும், செம்மையாகவும், நிறைவாகவும் செய்து புகழ்பெற்றார்.

ஹைதராபாத் நிசாம் அரசைப் பொறுத்த மட்டில் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னரே, அதை இந்தியாவுடன் இணைத்தார். அதைப் போன்றே, ஜுனாகத் அரசு தொடர்பாகவும், நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. ஒருமைப்பாட்டைக் காப்பதில் அவர் மேற்கொண்ட செயல் திட்டங்கள் போற்றத் தக்கனவாகும்.

ஆளுமைத் திறன்
படேல் ஒரு சிறந்த ஆளுமைத்திறன் மிக்கவாராகத் திகழ்ந்தார். இந்திய விடுதலைப்போரின் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து, அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, வெற்றிப் பாதைக்கு வழியமைத்து தந்தார்.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் சிறந்த சிற்பியாக விளங்கிய படேல், தாம் எடுத்துக் கொண்ட முன்னேற்றத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தும் திறமை உடையவாரகத் திகழ்ந்தார்.

இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஆற்றிய அரும்பணிகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தனவாகும்.

இத்தகைய பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் படேல், 1950 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் இந்திய விடுதலை வரலாற்றில், தமக்கெனத் தனியொரு இடத்தைப் பெற்ற தலைவர் ஆவார். காந்தி, நேரு, படேல் என்ற வரிசையில் வைத்து, வரலாற்றில் மதிப்பிடப் பெறத்தக்க தகுதியும், புகழும், பெருமையும் பெற்வர் படேல் ஆவார்.

நன்றி : செல்வி சிவக்குமார்

Leave a Reply