டெல்லி சட்ட மன்ற தேர்தலில் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் வெற்றிபெறுவோம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டெல்லி சட்ட மன்றத்துக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல்களத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் உள்ளன.

இருப்பினும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையேதான் போட்டி நிலவுகிறது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரி வாலுடன் இணைந்து செயல்பட்ட மாஜி ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி அண்மையில் பாஜவில் இணைந்தார். அவரை பாஜவின் முதல்வர் வேட்பாளராக மேலிடம் அறிவித்தது.

கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஒருதிட்டமிட்ட செயல் என்றும் யாருடைய கட்டாயத்துக் காகவும் இதனை பாஜக அறிவிக்கவில்லை என்றும் பாஜக.,வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்தபேட்டி:கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் கட்சியில் எந்தபிளவும் ஏற்படவில்லை. கிரண்பேடிக்கு நல்ல இமேஜ் உள்ளது. பொதுவாழ்வில் தூய்மையாக இருப்பவர்களுக்கு பாஜக தொடர்ந்து வாய்ப்பு அளித்துவருகிறது.

ஊழல் மற்றும் குற்றங்களுக்கு எதிராக கிரண்பேடி தொடர்ந்துபோராடி வருகிறார். அவருக்கு உள்ள நல்ல இமேஜ், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் பாஜ வெற்றி பெற உதவியாக இருக்கும். இதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரண்பேடிக்கு எதிராக பாஜவில் ஒருவர்கூட போர்க்கொடி தூக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பத்திரிகைகள்தான் இதனை பெரிதுபடுத்தி வருகின்றன. பத்திரிகைகளின் விருப்பத்துக்காக எனது செயல்திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது. எங்களது செயல் திட்டத்துக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply