ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட பொதுஜனம் என்ற கார்ட்டூன் உருவத்தைப் படைத்த ஆர்.கே.லட்சுமணன், 94ஆவது வயதில் கடந்த 26ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காலமாகி விட்டார். ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான அவரின் கார்ட்டூன்களை ரசித்துவந்த ஏராளமானவர்கள், அவற்றைப் பற்றி ஊடங்களில் சிலாகித்துவருகிரார்கள், ஒரு வாரமாக!

மைசூரில் பிறந்த லட்சுமணனுக்கு வாசிக்கத் தெரியும் முன்பே, 5 பத்திரிகைகளில் அவரின் கார்ட்டூன்கள் வெளியாகி விட்டன. பள்ளி முடித்தவுடன், மும்பையின் பிரபல ஜெ.ஜெ. ஓவியப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். ஆனால், அவரின் படங்கள் சரியில்லை என சேர்க்க மறுத்து விட்டார்கள். லட்சுமணனுக்கு ஓவியப் படிப்பு மறுக்கப்பட்ட அதே மும்பையின் பிரபலமாக பின்னாளில் கொண்டாடப்பட்டார். மறைந்த பால் தாக்கரே, இவருடன் பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமணன் பற்றி ஓவியக் கலைஞர் ட்ராஷ்கி மருது, "என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்து ஆர்.கே.லட்சுமணனின் கார்ட்டூன்களைப் பார்த்து வருகிறேன். எல்லாவற்றிலுமே பயமில்லாத லைன், அழுத்தமான கோடு இருக்கும். எனக்குள் தாக்கத்தை உண்டாக்கியது அதுதான். என் சிறு வயதில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பல நாட்டுத் தலைவர்களை இங்கிலாந்தின் டேவிட்லோ வரைந்த கார்ட்டூன்கள், உலக அளவில் பேசப்பட்டவை. அவருடைய பாணிதான், லட்சுமணனுக்கும் என்று சொல்வார்கள். இந்திரா, மொரார்ஜி போன்ற தலைவர்கள் எதிர்த்தும், அதிகாரத்துக்கோ அரசியல் தலைமைக்கோ பயப்படாதவர். செய்திக்கு ஏற்ப உடனே கார்ட்டூன்களை வரைந்து தள்ளுவது, அவரின் தனித்தன்மை.

குறிப்பாக, அவசரநிலையின்போது அவர் வரைந்த கார்ட்டூன் மறக்கமுடியாதது. யூ செட் இட் (நீங்கள் அதைச் சொன்னீர்கள்) என்ற தலைப்பில் வெளியான அவரின் கார்ட்டூன்களை சேகரித்து வைத்திருக்கிறேன். டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிக்கை அலுவலகத்தில் உட்கார்ந்த படி சன்னலுக்கு வெளியில் இருந்த காகங்களின் இயல்பை அப்படியே ஓவியமாக வெளிப்படுத்தியிருப்பார். நான் ரொம்பவும் ரசிக்கும் தொகுப்பு அது. கடந்த நூற்றாண்டில் ஒரு ஓவியக்கலைஞனின் பார்வையில் இந்திய வாழ்வை நையாண்டியாகவும் பிரியத்துடனும் கிண்டல்கேலியுடனும் பதிவுசெய்தவர்" என உணர்வு பொங்கக் குறிப்பிடுகிறார், ஓவியக் கலைஞர் மருது.

"இந்தியா முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் ஆர்.கே லட்சுமணனின் பாதிப்பு இல்லாமல், எந்த கருத்துப்பட கலைஞரும் இல்லை. எவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாக்கி விடுவார். இங்கு பலரும் அவருடைய பாணியிலேயே வரைகிறார்கள். அவரைத் தாண்டிவந்தவர் என யாரையும் சொல்லமுடியாத நிலைதான் இன்னும் இருக்கிறது. இந்திய சமூகத்துக்கு இருக்கும் பொது அரசியலறிவைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப அரசியல் மீதான தார்மீக கோபத்தை கார்ட்டூனாக வெளிப்படுத்தியது, ஆர்.கே. லட்சுமணனின் தனித்தன்மை" என்கிறார் ஓவியக் கலைஞரான கண்ணா.

நன்றி : நக்கீரன்
– தமிழ்க்கனல்

Tags:

Leave a Reply