தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊழலை எதிர்த்து பாஜக போராடி கொண்டிருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஊழல் குற்றச் சாட்டில் பதவியை இழந்து தொகுதியில் பிரசாரம் செய்யமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

அதனால்தான் பொது மக்களிடம் ஊழலுக்கு எதிராக நாங்கள் தீவிரமாக பிரசாரம்செய்து வருகிறோம். ஸ்ரீரங்கம் தொகுதிமக்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஊழலுக்கு எதிரான ஓட்டாக இருக்கவேண்டும். இதுதான் எங்கள் பிரசாரம்.

வளர்ச்சியை நோக்கி பாரததேசம் சென்று கொண்டிருக்கிற நிலையில் ஸ்ரீரங்கமும் தேசிய நீரோட்டத்தில் கலக்கவேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும் என்றால் பா.ஜ.க.,வால் தான் முடியும். இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் அதிக கவனமாக இருக்கவேண்டும் .

27 அமைச்சர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 10 வாக்குச் சாவடி மையத்திற்கு ஒரு அமைச்சர் என்றவீதம் அதிகாரம் தலை விரித்தாடுகிறது. தற்போது பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைவிட கூடுதலாக தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. 27 அமைச்சர்கள் அளவிற்கு தேர்தல்ஆணைய அதிகாரிகள் வாக்குச்சாவடி அளவிற்கு நியமிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடியால் மத்தியில் நல்லாட்சி நடை பெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் மக்கள் மனநிலையில் மாற்றம் உள்ளது. ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சுப்பிர மணியத்திற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.

இதனை பார்த்துதான் மற்ற கட்சிகள் பயப்படுகின்றனர். 2 திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. தான். வருங்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என்றார்.

Leave a Reply