மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது. ஆனால் மனிதன் அதிகார வேட்கையில் உண்டாக்கிய போர்கள் பல வடிவத்தில் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. கையில் ஆரம்பித்த சண்டை, கத்தி, துப்பாக்கி எனத் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தொட்டு இப்போது பயோ வார் என்கிற உயிர்ப் போரை எட்டியுள்ளது. இப்போது பயோ வாரைத் தாண்டி அடுத்த கட்ட போர் வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மனித சமூகம். அதுதான் இணைய வழிப் போர்.

சர்ச்சைக்குரிய சினிமா திரைக்கு வருவதும் அது வெளி வரக்கூடாது என்று ஏதேனும் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்துவதும் நமக்குப் புதிதல்ல. சமீபத்தில் கூட அமீர்கான் நடித்த, 'பி.கே.' படத்திற்கு தடை கோரி ஆங்காங்கே போராட்டங்களும் வழக்குகளும் நடந்து வருகின்றன. இதே போல் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் படம், 'தி இண்டர்வியூ.' உள்ளூர் படத்தைத் தடை செய்வதில் பிசியாக இருந்ததால் இந்தியாவில் பெரும்பாலானோர், 'தி இண்டர்வியூ' பற்றி கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கு ஓர் அறிமுகம்…

'தி இண்டர்வியூ', ஓர் அமெரிக்கப் படம். இரண்டு அமெரிக்கர்கள் சி.ஐ.ஏ.வின் உதவியுடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஐ பேட்டி எடுப்பது போல் சென்று கொலை செய்வதுதான் படத்தின் கதை. இது ஒரு நகைச்சுவை த்ரில்லர் படம். படம் முழுக்க வட கொரிய அதிபரையும் மக்களையும் கிண்டல் செய்து பல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. வட கொரியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் படத்தை எங்குமே திரையிடக் கூடாது என்று வடகொரியா அறிக்கைவிட்டது. ஆனால் சோனி நிறுவனம் கிறிஸ்துமசூக்குப் படம் வெளியாகும் என்று அறிவித்தது. இதற்குப் பிறகுதான் ஒரு சாதாரண பட சர்ச்சை என்பதில் இருந்து இந்தப் பிரச்சினை வேறு விஸ்வரூபம் எடுத்தது.

அறிவித்த அடுத்த நாளே சிலர் சோனி நிறுவனத்தின் வலைப்பின்னலுக்குள் புகுந்து சோனியின் முக்கிய ரகசியத் தகவல்களைத் திருடி இணையத்தில் உலவ விட்டார்கள். அவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. அத்துடன் படம் வெளியானால் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சோனி நிறுவனம், 'தி இண்டர்வியூ' படத்தை வெளியிடப் போவதில்லை என்று அறிவித்தது.

பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்திருக்கும் போதுதான் பிரச்சினை தொடங்கியது. அமெரிக்க அரசாங்கம் சோனி நிறுவனத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. அரசின் உறுதிமொழி ஏற்று சோனியும் படத்தை வெளியிட சம்மதித்தது. ஆனால் படத்தைத் திரையிடத் திரையரங்குகள் தயாராக இல்லை. இதனால் சோனி இதற்குயென்று பிரத்யேக வலைத்தளம் உருவாக்கி இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டது. ஆறு டாலர்கள் கட்டி, யாரும் பார்க்கலாம் என்று அறிவித்தது. ஆவல் மிகுதியாலும் இந்த இணையதளமும் தாக்கப்படலாம் என்பதாலும் பலர், 'தி இண்டர்வியூ' படத்தைப் பார்த்தனர் (பார்த்தவர்களில் பலர், படமாடா அது என்கிற லெவலுக்கு நொந்துகொள்ளும் அளவுக்கு மோசமாக இருந்தது தனிக்கதை).

 இதற்கிடையில் அமெரிக்க அரசாங்கம் இன்னொரு அறிவிப்பில் இந்த இணையவழித் தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம் என்றது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 'அமெரிக்கா இதை சோனி நிறுவனத்தின் மேல் தொடுத்த தாக்குதலாகப் பார்க்கவில்லை. அமெரிக்காவின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாகப் பார்க்கிறது. இதற்குத் தக்க சமயத்தில் பதிலடி தரப்படும்' என்று கர்ஜித்தார். இதை, 'வடகொரியாவின் இணையவழி தீவிரவாதம்' என்று ஒபாமா கூறினாலும் இதை, 'இணையப் போர்' என்கின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளின் சபை முன்னாள் உறுப்பினர் நியூட் கிங்ரிச்சும் மற்றும் செனட்டர் ஜான் மெக்கெய்னும்.

வடகொரியாவோ இதை முற்றிலும் மறுத்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என்றெல்லாம் கிண்டலும் செய்தார் ஒரு வடகொரிய அமைச்சர். ஆனால் செய்த தவறை எந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது? என்று வடகொரியாவின் மறுப்பை நிராகரிக்க முடியவில்லை. அதற்கு அது முன்வைக்கும் காரணங்கள் கணக்குள் எடுத்துக் கொள்ள கூடியவையாக இருக்கின்றன. 'இதைவிட மோசமாக முழுக்க முழுக்க எங்களை வில்லன்களாகச் சித்தரித்து பல படங்கள் வந்துள்ளன. 'தி இண்டர்வியூ' ஒன்றும் புதிதல்ல. எங்கள் தலைவரை மோசமாக சித்தரித்ததாலேய நாங்கள் தடை கோரினோம். நாங்கள் சோனியை முடக்கவில்லை' என்கிறது வடகொரிய அரசு.

உண்மையில் அமெரிக்காவின் சோனி நிறுவனத்தைத் தாக்குமளவுக்கு வடகொரியாவின் இணையதளக் கட்டமைப்பு அத்தனை வலுவானதில்லை. இணையத்திற்கான பராமரிப்பைக் கூட அது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிடம்தான் பெருகிறது. மேலும் இணையத்தின் பெரும் ஜாம்பவானான அமெரிக்காவால் வடகொரியாதான் தாக்கியது என்பதற்கு ஆதாரத்தை ஏன் தரமுடியவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்கா வடகொரியாவை மனித உரிமைகளை மீறுகிறது என்று சொல்லி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அதற்கு வலு சேர்ப்பதற்காகவே இப்படியொரு குற்றச்சாட்டை அமெரிக்கா வைப்பதாக வடகொரியா கூறுகிறது. சோனி நிறுவனத்தை அமெரிக்காவே தாக்கியிருக்கலாம் என்றும், 'ஈராக்கில் அணு ஆயுதம் இருக்கிறது' என்று அமெரிக்கா தாக்குதல் தொடுத்த கதைதான் இதுவும் என்றும் குற்றம் சாட்டுகிறது.

இதைக் கடுமையாக மறுத்த அமெரிக்கா, 'இது சீனாவின் உதவியுடன் வடகொரியா நிகழ்த்திய தாக்குதல்களே. சீன – வடகொரியா எல்லையில் இருந்துதான் தாக்குதல் நடந்திருக்கிறது' என்று பதிலளித்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா தரவில்லை.

வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் ரஷ்யாவும் குரல் கொடுத்துள்ளன. ரஷ்யா – சீனா – வடகொரியா என்கிற அணியைக்கண்டு அமெரிக்கா கொஞ்சம் கடுப்பில் இருக்கிறது. சோனி நிறுவனம் தாக்கப்பட்ட சில தினங்களில் தென் கொரியாவின் அணு உலைகளின் புளூபிரிண்ட் மற்றும் சில முக்கியத் தகவல்கள் இணையத்தில் வெளியாயின. சில மிரட்டல்கள் வந்தன. இதற்குக் காரணம் வடகொரியாதான் என்று தென்கொரியா சந்தேகிக்கிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து, 'ஸ்டக்ஸ்நெட்' என்கிற புரோகிராம் மூலம் ஈரானின் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்களைச் செயலிழக்கச் செய்தன. அதன்படி அமெரிக்கா –இஸ்ரேல் தென்கொரியா என்று ஓர் அணி உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இதை இணையப் போருக்கான அணி சேர்த்தலாக வல்லுனர்கள் பார்க்கிறார்கள்.

மூன்றாம் உலகப் போர் நடக்குமா, நடக்காதா, என்கிற பதட்டத்தில் எப்போதும் உலக நாடுகள் இருந்து வந்துள்ளன. ஒருவேளை நடந்தால் அது இணையவழியில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி :புதிய தலைமுறை

Tags:

Leave a Reply