வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் மிகப்பெரிய பலம் என்பதை மத்திய கொள்கைக்குழு அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் இலக்குகளையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் சர்வதேசளவில் கொண்டுசெல்ல இந்தியத்தூதரக அதிகாரிகள் அயராது பாடுபடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கான இடத்தை முதல் வரிசையில் கொண்டுவர தூதர்கள் பாடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தில்லியில், "வளர்ச்சிக்கான ராஜீய நடவடிக்கை' என்ற பெயரில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியாவுக்கான தூதர்கள், தூதரக அதிகாரிகளின் 4 நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இந்தமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வெளி நாடுகளில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் தான் இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் "பிரகாசமான, எழுச்சிமிக்க பிரதி நிதிகள்' ஆவர்.

உலக அமைதிக்கும், வளத்திற்கும் புதிய ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ள உலகநாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமையாகும்.

தற்போது உலக நாடுகள் இந்தியாவுடன் கைகோக்க விரும்புகின்றன. இந்தச் சூழலானது இந்தியாவுக்கு அரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இந்தியாவும் நம்பிக்கையுடன் பணியாற்றுகிறது.

இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, உலகளவில் இந்தியாவை முதல்வரிசைக்கு கொண்டுசெல்ல வேண்டும். சமமான அளவில் வளர்ந்தால் போதுமானது என்று நினைத்து வாய்ப்பை தவறவிடக்கூடாது.

தூதரக அதிகாரிகள் பழைய மனோ பாவத்தைக் கைவிட வேண்டும். உலகில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் தங்களை மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் சுற்றுச் சூழலைக் காப்பதிலும், சுற்றுச் சூழல் தொடர்பாக உலக நாடுகள் கொண்டுள்ள மனப்பான்மையை மாற்றுவதிலும் இந்தியா முக்கியப்பங்காற்ற வேண்டும்.

ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகாதினமாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஐ.நா. சபை அங்கீகரிப் பதற்காக பாடுபட்ட தூதரக அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள்.

உலகில் உள்ள அனைத்து மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கும், மன அழுத்தத்திற்கும் யோகா தான் சிறந்த தீர்வு என்பதை எடுத்துரைக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் நவீனமின்னணு நூலகங்களை தூதரகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த அல்லது வர விரும்புகிற மற்றநாடுகளின் முக்கியத் தலைவர்களுடன் தூதர்கள் தொடர்பில் இருப்பது அவசியம்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் மிகப்பெரிய பலம் என்பதை மத்திய கொள்கைக்குழு அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் இலக்குகளையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் சர்வதேசளவில் கொண்டுசெல்ல இந்தியத்தூதரக அதிகாரிகள் அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply