வெளிநாட்டில் கருப்புபணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான புதியபட்டியலில் புதிய நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது, அதனது உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும் என்று மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து, லிச்டென் ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் கறுப்புபணத்தை பதுக்கி வைத்துள்ளனர். கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்துவருகிறது. கறுப்புபணம் பதுக்கியது தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்குவைத்துள்ள அனைவரது பெயர்களையும் (627 பேர்கள்) மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது.

கறுப்பு பணம் விவகாரம் தொடர்பாக 60 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பதுக்கிய பணம் ரூ. 1500 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் வெளியாகின. இது வரையில் 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களே ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் பணம் வைத்திருந்தனர் என்று நம்பப் பட்டது. இந்த தகவல்கள் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி ஊழியளரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு பரிமாறி கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது வெளிநாட்டு வங்கியில் பணம்வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களது கணக்கில் 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் அவர்களது வங்கிகணக்கில் உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாள் பெற்ற தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆவணங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், "கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தொடர்பாக இன்று வெளியாகியுள்ள தகவல்களை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம். பெயர்கள் குறித்து எந்த ஒரு கேள்வியும் இல்லை, ஆனால் ஆதாரங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. என்று கூறினார்.

Leave a Reply