பண்டரிபுரத்தில் யோகா பிரம்மானந்தர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தினசரி காலையில் எழுந்ததும் அங்குள்ள பீமா நதியில் நீராடி விட்டு, பகவத் கீதை முழுவதையும் படிப்பார். ஒவ்வொரு சுலோகத்தைச் சொல்லி முடித்ததும் கீழே விழுந்து நமஷ்கரிப்பார்.700 சுலோகங்களைச் சொல்வதற்கு 700 தடவை விழுந்து நமஷ்கரிப்பார். இவ்வாறு பல ஆண்டுகளாக அவரது வழிபாடு தொடர்ந்தது.

ஒருநாள் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தபோது சால்வை வியாபாரி ஒருவர் ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் கஷ்டத்தில் தத்தளித்தார். மழையில் சால்வைகள் நனைந்துவிடுமே என்று கவலைப்பட்டார். அவரது நிலை கண்ட பிரம்மானந்தா அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். அவரது வீடும் ஒரு சிறிய குடிசை வீடுதான். அங்கும் கூட சில இடங்களில் ஒழுகிக் கொண்டிருந்தது. இருப்பதில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து அந்த சால்வைகளை நனையாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். பிரம்மானந்தரின் நல்ல மனதைப் பார்த்த அந்த வியாபரி மழை விட்ட பிறகு ஒரு நல்ல காஷ்மீர் சால்வையை அவருக்கு நன்றிக் கடனாக வழங்கி விட்டுச் சென்றார்.

பிரம்மானந்தா மறுநாள் முதல் அந்த சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். தனது விலையுர்ந்த சால்வையை மற்றவர்கள் யாராவது பார்க்க மாட்டார்களா என்று ஏங்கினார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் சால்வை அழுக்காகி விடுமே என நினைத்து, பெண்கள் நமஷ்கரிப்பது போல் வணங்கத் துவங்கினார். அவ்வளவுதான், அவரது நிம்மதி குலைந்து மனம் முழுமையாக வழிபாட்டில் ஈடுபடாமல் போய்விட்டது.

உடனடியாக தனது தவறைப் புரிந்துகொண்டு, அந்த சால்வையை தூக்கி வீசி எரிந்து விட்டு, தனக்குத்தானே தண்டனை கொடுக்க விரும்பினார். வயல்வெளியில் இரண்டு காளைகள் ஏர் உழுது கொண்டிருந்த ஏரில், தன்னையும் ஒரு கையிற்றால் கட்டி தனது சரீரம் மண்ணிலும், கல்லிலும் புரளட்டும் என முடிவெடுத்தார். அந்த நிமிடமே கயிறு அறுந்து அங்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்குத் தரிசனம் அளித்தார்.

பகட்டோடு செய்யும் பக்தியைவிட ஆத்மார்த்தமான எளிமையான பக்தியே கடவுளை அடைவதற்கு வழிகாட்டும்.

 

 

நன்றி : விஜய பாரதம்

Tags:

Leave a Reply