டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே 'தேநீர் விவாதம்' நடந்தது.

இந்த சந்திப்பில் டெல்லிக்கு முழு அதிகாரம் அளிப்பது மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 10-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமது வீட்டில் தேநீர் சந்திப்புக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று காலை அவரை சந்தித்தார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் கேஜ்ரிவாலின் நெருங்கிய சகாவுமான மணிஷ் சிசோடியா அப்போது உடனிருந்தார்.

இந்த சந்திப்பில், டெல்லிக்கு முழு அதிகாரம் அளிப்பது மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து பிரதமருடன் இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து பின்னர் மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்தியில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பது போல டெல்லியில் ஆம் ஆத்மிக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்து, இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு இருவரும் இணைந்து பாடுபடும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருப்பதாக பிரதமரிடம் கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லிக்கு முழு அதிகாரம் இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளை பிரதமரின் கவனத்துக்கு கேஜ்ரிவால் கொண்டு சென்றார். இந்த விஷயத்தை தாம் கவனத்தில் கொள்வதாக பிரதமர் உறுதி அளித்தார்" என்றார்.

Tags:

Leave a Reply