பாரத குடியரசு தின விருந்தாளி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை அவர் விடை பெற்றபோது ஆற்றிய உரை குறித்து எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் கிளப்பிய சர்ச்சைக்குரிய விவாதங்கள், விமர்சனங்கள், ஏன்? அமெரிக்க அதிபரின் வருகையால் நமது நாட்டிற்கு கிடைத்த நல்ல பயன்கள், பலன்கள் நாட்டு மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்ற திட்டமிட்ட கெட்ட எண்ணமே. கடந்த பத்து வருடங்களில் செயலிழந்துபோன அரசால் சீரழிக்கப்பட்ட நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி திட்டங்களை, முன்னேற்றங்களை சீர்தூக்கி நிறுத்தியுள்ளது இந்திய – அமெரிக்க பேச்சு வார்த்தைகள்.

அணு உலை விபத்து காப்பீடு குறித்த விவகாரத்தால் கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியா, அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் நீடித்து வந்த சிக்கல், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருவருக்கிடையேயான பேச்சு வார்த்தையில் தீர்ந்துள்ளது. அணு உலை விபத்து இழப்பீடு குறித்த 'கூட்டு காப்பீடு' திட்டத்திற்கு இந்தியா யோசனை தெரிவித்தது. இந்த மாற்றுத் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

இதில் அணு உலைகளை நிறுவும் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு எவ்வளவு, இந்தியாவில் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் பங்கு எவ்வளவு, இந்திய பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களின் மூலம் நம் பங்கு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் அணு உலைகள் தயாரிக்கும் அமெரிக்க தனியார் நிறுவனங்களிடம் அந்த அரசு நடத்தும் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இங்கே உள்ள எதிர்க்கட்சிகள் முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும் இந்தியாவே இந்த காப்பீட்டுத் தொகையை செலுத்த முன் வந்து விட்டதாகவும் தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மேலும், இந்த இரு தரப்பு பேச்சு வார்த்தைகளையடுத்து, இந்திய அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்கள் இனி கண்காணிக்காது என்றும் எந்த சூழ்நிலையிலும் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படமாட்டாது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அணு சக்தி ஒப்பந்தை செயல்படுத்துவதில் நீடித்த சிக்கல் நீங்கியுள்ளது. இதன் பின், இந்தியாவில் அணு உலை நிறுவனங்களை தொடங்க அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியர்கள் எல்லோருக்கும், எப்போதும் தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கனவு நனவானது.

பாதுகாப்புத் துறையில், இந்திய அமெரிக்க நாடுகள் இணைந்து கூட்டு தயாரிப்பில் பாதுகாப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரசாயன, உயிரியல் ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளாகும் போர்வீரர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களை உருவாக்குவது போன்ற பல திட்டங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு நவீன தொழில் நுட்பங்களின் துணையோடு வலுபெருவது உறுதியாகியுள்ளது. இதன் உற்பத்தி மூலம் நம் நாட்டின் தேவை மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதம் மூலம் மேலும் நம் கட்டமைப்புகள் பெருகுவதோடு, பிரதமரின் 'இந்தியாவில் தயாரியுங்கள்' (Make in India) திட்டத்தின் அடிப்படையில், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதியின் மூலம் பொருளாதாரம் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பசிபிக் பகுதியில், குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் பதட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச விதிகளின் படி இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒபாமா குறிப்பிட்டது சீனாவின் அகங்கார போக்கை சுட்டி காட்டியதோடு, ஆசிய பிராந்தியத்தில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை உலகிற்கு உணர்த்தியது நமது அரசுக்கு கிடைத்த வெற்றி.

சுத்தமான எரிசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கு தொழில்நுட்ப நுணுக்கங்களை பரிமாறிக் கொள்வது, அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவது, ஆய்வுகளை மேற்கொள்வது, இதற்கான

கொள்கை சார்ந்த விவாதங்களை விரிவாக்குவது, தொழில் நுட்ப அடிப்படையில் சுத்தமான எரி சக்தி குறித்த முன்மாதிரி திட்டங்களை வடிவமைப்பது, உலக வெப்பமயமாதலுக்கு மாற்றுகளை உருவாக்குவது போன்ற திட்டங்களை இணைந்து செயல்படுத்துவது போன்ற தேச நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்குமான முதலீடுகள் குறித்து பேச்சு வார்த்தைகளை புதுப்பிப்பது, தொடர்வது, தற்போது உள்ள இருநாட்டு வர்த்தகமான 6 லட்சத்து இருபது ஆயிரம் கோடியை 31 லட்சம் கோடியாக உயர்த்துவது போன்ற அதி முக்கியமான வர்த்தக உடன் படிக்கைகள் கையெழுத்தானது. இவை இருநாடுகளுக்குமான வர்த்தக உறவை பலப்படுத்துவதோடு, பொருளாதாரத்தை உச்ச நிலைக்கு எடுத்து செல்லும் என்பது உறுதி. இது சீன – அமெரிக்க வர்த்தகத்தை எட்டி பிடிக்கும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க வெளிநாட்டு தனியார் நிறுவனம் மூலம் 6,200 கோடி ரூபாய் 'இந்தியாவில் தயாரியுங்கள்' (MAKE IN INDIA) திட்டத்தில், இந்தியாவின் கிராமப்புறங்களில் முதலீடு செய்யப்படும் எனவும் நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் 12,500 கோடியும், 'அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது' என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவால் உறுதியளிக்கபட்டது.

உலக அளவில் பெருகி வரும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாரதமும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது, எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அடக்குவதில் பரஸ்பரம் உதவுவது என்று இன்றியமையாத ஒப்பந்தம் இந்தியா பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது என்பதன் மூலம் உலகெங்கும் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாஜக அரசின் அருமையான 'துடிப்பான நவீன நகரங்கள்' (SMART CITIES) திட்டத்தின் கீழ் அஜ்மீர், விசாகபட்டினம், அலகாபாத் ஆகிய மூன்று நகரங்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சூரிய எரிசக்தி திட்டத்திற்கு 500 கோடி முதலீடு போன்ற பல துறைகளில் எண்ணற்ற ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

பாகிஷ்தான் உறவு குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் அமெரிக்க தரப்பில் பேசப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அது குறித்து எதுவும் பேசப்படாதது பாகிஸ்தானுக்கு எரிச்சலையும், அச்சத்தையும் உண்டாகியிருக்கும் என்பதும், கால நிலை மாற்றம் குறித்து இந்தியா சுதந்திரமாக முடிவெடுக்கும் என்ற பிரதமர் மோடி பேச்சு இந்தியா வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியுள்ளது.

ஆக, மொத்தம் அமெரிக்க அதிபரின் இந்த விஜயம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு, பாதுகாப்பிற்கு, தொழில் துறைக்கு, வர்த்தகத்திற்கு, இயற்கை நலனிற்கு, மின்சார தேவையில் பூர்த்தி செய்வதற்கு, வேலைவாய்ப்பை பெருக்குவதன் மூலம் தனி மனித வாழ்வாதாரத்திற்கு, தொழில் நுட்பங்களை பெறுவதற்கு, எண்ணற்ற துறைகளில் ஆசியாவின் முதன்மை நாடாக இந்தியா விளங்குவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் எழுச்சி நடைபோடுவதற்கான முதல் படி என்பதை உறுதி செய்துள்ளது.

நன்றி : விஜய பாரதம்
-தி. நாராயணன்

Tags:

Leave a Reply