இந்தியா இலங்கை இடையே ஆக்கப்பூர்வ அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மதியம் சந்தித்தார். இருவரும் அணு சக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி, கலாச்சாரம், மீனவர்விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்பின்முடிவில் இந்தியா – இலங்கை இடையே ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், இந்தியாவில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக் கழகத்தின் கிளைகளை இலங்கையில் அமைப்பது, வேளாண்மை, ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் ஒத்து ழைப்பை மேம்படுத்துவது உள்ளிட் டவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சிறிசேனா மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் இப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இச்சந்திப்புக்கு பிறகு, பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆக்கப்பூர்வ அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு என்பது இருநாடுகளின் பரஸ்பர நம்பிக்கையாகும். இது போன்ற ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது இதுவே முதல் முறை.

இந்த ஒப்பந்தங்கள், வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான பாதை யைத் திறந்து விட்டுள்ளது. ராணுவம், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இலங்கை அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு இருவருமே அதிகமுக்கியத்துவம் கொடுத்தோம். இப்பிரச்சினை இருதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. இப்பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான, மனி தாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு இருவருமே உறுதிபூண்டுள்ளோம்.

இருதரப்பு மீனவர் சங்கங்கள் விரைவில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை ஊக்குவிக்கிறோம். அவர்கள் எடுக்கும்முடிவுக்கு இருநாட்டு அரசுகளும் செயல் வடிவம் கொடுக்கும்.

இலங்கையில் முதலீடு செய்யவும், சுற்றுலாவை அதிகரிக்கவும் இந்தியா தயாராக உள்ளது. இலங்கைக்கான கடல் மற்றும் வான் வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இலங்கையில் உள்நாட்டு போரால் புலம் பெயர்ந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. இதுவரை 27,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு நிச்சயம்யிருக்கும் என்று உறுதியளிக்கிறேன். உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் விரிவான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply