பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்–சுமதி ஆகியோரின் மகன் ஹரி சஷ்டிவேலுவுக்கும், தொழில் அதிபர் ராமமூர்த்தி–வாசுகி ஆகியோரின் மகள் மதுமிதாவுக்கும் திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் தோட்டத்தில் நேற்று மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் , பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

விழா மேடையில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் கை குலுக்கிய மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

''ஸ்ரீரங்கத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு நிரந்தரம் அல்ல. இந்த தோல்வியினால் மக்கள் எங்களை வெறுத்து விடவில்லை.

2016–ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பா.ம.க. கட்சியில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்திருப்பது அவர்கள் கட்சிக்குட்பட்ட விஷயம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் செய்கிறார்கள்.

இதனால் பாரதீய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த திருமண விழா எங்கள் குடும்ப விழா. விழாவில் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்''என்று கூறினார்.

Tags:

Leave a Reply