கடந்தவாரத்தில் இரு தலைவர்களின் உதவும் கரச்செயல்கள் உலகத்தையே ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருவர் மன்னர், அடுத்தவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நாட்டின் பிரதமர். சவுதி அரேபியா நாட்டில் புதிய மன்னராக பொறுப்பேற்று இருக்கும் சல்மான், தன் நாட்டில் உள்ள குடிமக்களுக்கு வாரி, வாரி வழங்கியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்புப்படி ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடியை திடீரென வழங்கி அனைவரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

அடுத்தவர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, மோடி ஒரு கோட்டு போட்டிருந்தார். அந்த கோட்டில் கோடு போட்டதுபோல வரிசையாக அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கோட்டு, நரேந்திர மோடியின் 40 ஆண்டுகால நண்பரான குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் பிக்காபாய் பரிசாக கொடுத்தது. இந்த கோட்டின் விலை எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், லண்டனில் உள்ள ஒரு பத்திரிகையில் கிசு கிசு பகுதியில் இந்த கோட்டின் விலை 10 ஆயிரம் அமெரிக்க டாலரின் மதிப்பில் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தவுடன், இந்திய ரூபாய் மதிப்பில் கூட சற்று அதிகமாக சேர்த்து ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டு செய்தி வந்தது. இதுதான் சாக்கு என்று எதிர்க்கட்சித்தலைவர்களும் விமர்சன கணைகளை வீசத்தொடங்கிவிட்டனர்.

நரேந்திர மோடியைப் பொருத்தமட்டில், அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில், முதல்-மந்திரி என்ற வகையில், அவருக்கு விழாக்களின்போது வழங்கப்படும் எந்த பரிசு பொருளையும் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை அந்த பொருட்களையெல்லாம் ஏலம்விட்டு, அந்த மாநிலத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் பெண் கல்வித்திட்டத்துக்கு அந்த தொகையை வழங்கிவிடுவார். அவருடைய 13 ஆண்டுகால முதல்-மந்திரி காலத்தில் இவ்வாறு அவருடைய பரிசு பொருட்களை ஏலம்விட்டு, ரூ.95 கோடியை பெண் கல்வித்திட்டத்துக்காக வழங்கியுள்ளார். இவ்வளவு ஏன் பிரதமராக பொறுப்பேற்க குஜராத்தைவிட்டு கிளம்பும்முன்பு, தனது சொந்த சேமிப்பில் இருந்த ரூ.21 லட்சத்தை டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக வழங்கினார்.

அதேபோல, சர்ச்சைக்குரிய இந்த கோட்டு உள்பட கடந்த 9 மாதகாலத்தில் பிரதமர் என்ற வகையில், அவருக்கு கிடைத்த 455 பொருட்களை ஏலம்விட்டு, அதனால் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க ஏற்பாடு செய்தார். அவர் அணிந்த கோட்டு மட்டும் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம் போனது. பொதுவாக அரசியல் ரீதியாக மந்திரிகளுக்கான நடத்தைவிதிகளை குறிப்பிட்டு, ரூ.5 ஆயிரம் மதிப்புக்கு மேற்பட்ட பரிசுப்பொருட்களை அரசாங்கத்திடம்தானே ஒப்படைக்கவேண்டும் என விமர்சனங்கள் கூறப்பட்டாலும், எதுவும் எடுபடவில்லை. நரேந்திர மோடியை பின்பற்றி, அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஏலம்விட்டு, மக்களிடம் இருந்து கிடைத்தது, மக்களுக்கே போய்ச்சேரட்டும் என்ற வகையில், நலத்திட்ட உதவிகளுக்காக வழங்கினால், அதை தலைவர்களுக்கு பரிசாக கொடுக்கும் மக்களுக்கும் ஆசையாக இருக்கும், அதை ஏலம் எடுக்கும் மக்களுக்கும் தலைவருடைய பொருள் நம்மிடம் இருக்கிறது என்று ஒருபுறத்தில் பெருமையும், மற்றொருபுறத்தில் நாம் ஏலம் எடுக்கும் தொகை ஒரு நல்ல காரியத்துக்குத்தானே செல்கிறது என்ற மனநிறைவும் இருக்கும். அரசியல்வாதிகளும், பொதுமக்களும் பங்கேற்க பல நலத்திட்டங்கள் வரிசையாக இருக்கிறதே!

நன்றி; தினத்தந்தி

Leave a Reply