ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி சேர்ந்து அரசமைக்க இருப்பதாக, மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) பாஜகவும் செவ்வாய்க்கிழமை முறைப்படி அறிவித்தன.

இதனால், அந்தமாநிலத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? என இரண்டு மாதங்களாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

புதிய அரசு வரும் மார்ச் 1-ம் தேதி பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தில்லியில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷாவை, அவரது இலத்தில் பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகிய சர்ச்சைக்குரிய விவகாரங்களை உள்ளடக்கிய வகையில் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 45 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அமித் ஷா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பதற்காக, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதில் ஒருமித்த முடிவை நெருங்கிவிட்டோம்.

பிரதமர் நரேந்திர மோடியை பிடிபி மூத்த தலைவர் முஃப்தி முகமது சயீது சந்தித்த பிறகு, பதவியேற்பு நாள் அறிவிக்கப்படும் என்றார் அமித் ஷா.

இதையடுத்து, மெஹ்பூபா முஃப்தி கூறியதாவது:

கடந்த காலங்களைப் போல் அல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் நலனையும், நாட்டின் நலனையும் மனத்தில் கொண்டு, பாஜகவுடன் பிடிபி கூட்டணி அமைத்துள்ளது.

ஊழலற்ற, வளர்ச்சிக்குரிய நிர்வாகத்தை இந்த மாநில மக்களுக்கு அளிப்பதன் மூலம், நாட்டின் மற்ற பகுதியில் இருந்து தனித்துவிடப்பட்ட அவர்களது மனநிலை முடிவுக்கு வரும். நாடும், மாநிலமும் பயன்பெறும் வகையில் முடிவு எடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார் மெஹ்பூபா முஃப்தி.

Tags:

Leave a Reply