திரிணாமுல் காங்கிரஸ்சில் இருந்து ஓரம் கட்டப்பட்ட மூத்த தலைவர் முகுல் ராய் தற்போது அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முகுல் ராய் சந்தித்திருப்பதால் அவர் பாஜக.,வில் இணையக்கூடும் என கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மமதா பானர்ஜிக்கு அடுத்ததாக நம்பர் 2 நிலையில் இருந்தவர் முகுல் ராய். அண்மையில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிபிஐ.யால் விசாரிக்கப்பட்டார் அப்போது இது தொடர்பான அனைத்து விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார். .

இதனைத் தொடர்ந்து முகுல்ராயை கட்சியில் இருந்து ஓரம்கட்ட தொடங்கினார் மமதா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியில் முகுல் ராய் மட்டுமே இருந்துவந்தார். அந்த பதவிக்கு எம்.பி. சுப்ரதா பாக்சியை நியமித்து முகுல்ராயின் முக்கியத் துவத்தைக் குறைத்தார் மமதா.

அதேபோல் நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸின் பிரதி நிதியாக முகுல் ராய் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். இதற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவின் திரிணாமுல் கொறாடாக்களான கல்யாண் பானர்ஜியும் ஓ பிரையனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப் பட்டது.

இதனால் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து வெளியேறி முகுல்ராய் தனிக் கட்சியைத் தொடங்க கூடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியில் இருந்து முகுல்ராய் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மத்திய அமைச்சர்களான அருண்ஜேட்லி மற்றும் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சந்திப்புகளின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸை விட்டுவிலகி பாஜக.,வில் முகுல் ராய் இணையக்கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

Leave a Reply