மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இந்திய நாட்டின் மகத்தான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொலைநோக்குப் பார்வையோடு அமைந்துள்ளது மத்திய அரசின் சிறப்பான பட்ஜெட்.

விவசாய கடனுக்கு ரூ.8.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வேளாண்மை உற்பத்திக்கும், விவசாய குடும்பங்களின் வளர்ச்சிக்கும் உதவிடும் உயரிய அறிவிப்புகள் ஆகும். அதன் மூலம் நாட்டில் வறுமை முற்றிலுமாக ஒழிய வழிவகை உருவாகும்.

கறுப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை, கறுப்பு பண பதுக்கலை தடுக்க பதுக்கிய தொகையை போல் 300 சதவீதம் அபராதம் என்ற அறிவிப்பு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கறுப்பு பண மீட்பு நடவடிக்கையில் அதிரடி திருப்புமுனை ஆகும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, கிராமப் புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்புறங்களில் 4 கோடி வீடுகள் அமைக்க இலக்கு, சிறு குறு தொழிலாளர்களுக்கு கடன் வழங்க பிரத்யோக திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள், 20,000 கிராமங்களுக்கு புதிய மின்சார வசதிகள் உருவாக்குதல் போன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணற்ற திட்டங்கள் நாட்டின் அனைத்து மக்களின் வாழ்வு, தொழில், பொருளாதாரம் மற்றும் கல்வி உயர்வுக்கு கிடைக்கப்பெற்ற இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயமாகும்.

குறிப்பாக தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:

Leave a Reply