பார்லிமென்ட் கேன்டீனுக்கு, நேற்று திடீர்விஜயம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, சக எம்.பி.,க்களுடன் உணவருந்தியதோடு, பசிக்கு உணவளித்த சமையலரை வாழ்த்தி குறிப் பெழுதியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.பார்லிமென்ட் வளாகத்தின் முதல்தளத்தில் உள்ள, அறை எண், 70ல், எம்.பி.,க்களுக்கான பிரத்யேக கேன்டீன் உள்ளது. இதில், பல்வேறு எம்.பி.,க்களும் உணவருந்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று, பார்லிமென்ட் கேன்டீனுக்கு திடீர்விஜயம் செய்த மோடி, அங்கு ஏற்கனவே உணவருந்தி கொண்டிருந்த எம்பி.,க்களுக்கு அருகில் அமர்ந்தார். பிரதமரின் வருகையை சற்றும் எதிர் பாராத எம்.பி.,க்களில் சிலர், தாமாக முன் வந்து, பிரதமரிடம் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். மோடியும், அவர்களிடம் நலம்விசாரித்தார்.

சாதாரண சைவ உணவு கேட்ட மோடிக்கு, சப்பாத்தி, கூட்டு, ரசம் மற்றும் அரிசிசாதம் அடங்கிய சாதாரண 'வெஜ் தாலி' வழங்கப்பட்டது. சாப்பிட்டபின், தன் பையிலிருந்து, 100 ரூபாய் நோட்டை எடுத்து, கேன்டீன் ஊழியரிடம் வழங்கினார். உணவுக்குரிய, 29 ரூபாய் போக, மீதி, 71 ரூபாயை திரும்ப பெற்ற மோடி, உணவு மிகவும் சுவையாக இருந்ததாக கூறினார். பிரதமரின் வருகையை பதிவுசெய்ய, குறிப்பெழுதிச் செல்லுமாறு உணவக ஊழியர் வேண்டினார். கேன்டீன் குறிப்பில், 'உணவளித்த நபர் வாழ்க' (அன்ன தாதா சுகி பவ) என, இந்தி மொழியில் எழுதிச்சென்றார். பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை எந்த ஒருபிரதமரும், பார்லி., கேன்டீனுக்கே சென்று உணவருந்தியது கிடையாது. மிக எளியன உணவை அருந்திய மோடி, தங்களை மனமாற வாழ்த்தியது மிகவும் பெருமையளிப்பதாக, கேன்டீன் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply