பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு நடத்து வதற்காக பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா வரும் வியாழக் கிழமை (மார்ச் 5) கோவை வருகிறார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஏ.பி. திருமண மண்டபத்தில் நடை பெறும் கூட்டத்தில் வியாழக் கிழமை காலை 11 முதல் 12.30 மணிவரை மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பகல் 2 மணியிலிருந்து ஒன்றிய தலைவர், பொதுச்செயலாளர், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள், முழு நேர ஊழியர்கள் ஆகியோரிடம் உறுப்பினர் சேர்க்கை குறித்த விவரங்களை அமித்ஷா நேரில் கேட்டறிகிறார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான பி. முரளிதரராவ், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், கே.என். லட்சுமணன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடுமுழுவதும் கடந்த 2014 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 31-ஆம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி சென்னை மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்த ஒரு வாக்குச் சாவடிக்கு 100 பேர் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்காக சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு முழுநேர ஊழியரும், வாக்குச் சாவடிக்கு ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

தில்லியில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் பாஜகவுக்கு வலுவான தளம் இல்லாதபோதிலும் இதுவரை 22 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை அமித்ஷா பாராட்டியதாகவும், மார்ச் 31-க்குள் 60 லட்சம் என்ற இலக்கை எட்டுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply