இந்தியா முழுவதும் பா.ஜ.க.,வை வலுப்படுத்தும் பணியை கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன்படி நேற்று கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது . பின்னர் அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள கோல்டு வின்ஸ் ஏ.பி.திருமண மண்டபத்தில் நடந்த மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த 42 மாவட்ட தலைவர்கள், 600 மண்டல தலைவர்கள், உறுப்பினர் சேர்ப்பு பொறுப் பாளர்கள் 3,500 பேர் கலந்துகொண்டனர். பிரிவு வாரியாக நடந்த இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது-

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்ப்புபணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு பஞ்சாயத்துகள் முதல் பாராளுமன்றம் வரை ஒரேகட்சியாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு பணியில் என்றைக்கு தொய்வு ஏற்பட்டதோ, அப்போதே அந்தகட்சியின் வீழ்ச்சி தொடங்கியது. அந்தகட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்து கூட இல்லாத அளவுக்கு 44 இடங்கள் தான் கிடைத்துள்ளது.

அமைப்பு ரீதியாக பா.ஜ.க பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டியது நமது கடமை. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி 6½ சதவீதத்திலிருந்து 7½ சதவீதமாக உயர்ந்தது. ஆனால் அது இப்போது பூஜ்ய சதவீதமாக உள்ளது. சாதாரண மக்களும் ரூ.1 கோடி வரை வங்கியில் கடன்பெறும் திட்டம், ஏழை மக்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் 10 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இதில் 6 கோடியே 20 லட்சம்பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 60 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 19 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 41 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத் துவதின் மூலம் வருங்காலத்தில் 300 எம்.பி.க்களை நாம் பெறமுடியும். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலிமையான கட்சியாக மாற்றவேண்டியது அவசியமாகும். பாராளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசிய போதிலும் தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளை மட்டுமே நாம் பெறமுடிந்தது.

இதற்கு காரணம் நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் மக்களிடையே கொண்டுசெல்லாதது தான். எனவே தமிழகத்தில் பூத்கமிட்டி அமைத்து அவர்கள் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலிமையானதாக மாற்றவேண்டும். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதில் தமிழகம்தான் முதல் மாநிலமாக உள்ளது. இதனை பா.ஜனதா கட்சியால் மட்டுமே மாற்ற முடியும். அதற்கு கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம்.

Leave a Reply