தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் தென்னாப் பிரிக்கா நாட்டில் உள்ள தீவில் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதில் 2 மீனவர்களை தவிர 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் 11 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இன்று நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். அப்போது தென்னாப்பிரிக்காவில் இன்னும் சிறை வைக்கப்பட்ட குளச்சலைச் சேர்ந்த ஜெரின், இரவிபுத்தன் துறையைச் சேர்ந்த கிரேசஸ் ஆகியோரின் குடும்பத்தினரும் வந்தனர். அவர்கள் கண்ணீர் மல்க தங்கள் உறவினர்களை மீட்டுத்தரும்படி மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். இன்னும் 2 பேர் மட்டும் அங்கு சிறையில் உள்ளனர். அவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 554 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல வேறு பல நாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட 124 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டவர்களில் 5 பேர் தூக்குத்தண்டனை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர பல்வேறு தடைகள் இருந்தது. அதனை மோடி அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 40 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையை பொறுத்தவரை மதுரை – கன்னியாகுமரி, நாகர்கோவில்–திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2500 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கியுள்ளன. மேலும் மேம்பாலம், சப்–வே ஆகியவையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக முயற்சி மேற்கொண்ட மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை போல் தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

தாமிரபரணியில் இருந்து நாங்குநேரி, சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் உள்ள விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 100 ஆண்டுக்கும் மேற்பட்ட சென்னை துறைமுகத்தின் அருகே எண்ணூர் துறைமுகம் அமைக்கப்பட்டது போல குளச்சலிலும் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும்.

மதுரவாயல் மேம்பாலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த பாலப்பணிகள் நிறைவுற்றால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தி.மு.க.வை வெளியில் இருந்து யாரும் அழிக்க முடியாது. ஆனால் தி.மு.க.வை தி.மு.க.வே அழித்து விடும். 2014 தேர்தலில் பா.ஜனதா கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி அமைத்து 50 ஆண்டுகள் முடிவுக்கு வந்து விட்டது. 2016–ம் ஆண்டு 51–வது ஆண்டு தொடங்கும் அது தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு வழி ஏற்படுத்தும். பா.ஜனதா கூட்டணியில் பிளவு இல்லை.

மீத்தேன் வாயு எடுக்கும் பிரச்சினையில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அரசு செயல்படக்கூடாது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தக்கலை அருகே மழை நேரத்திலும் சாலை அமைத்த ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு சாலை அமைத்ததை நானே பார்த்தேன்.

சுசீந்திரத்தில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவியை அழைக்கவில்லை. இது சரியான நடவடிக்கை அல்ல. அங்கு பிரகாரத்தை சுற்றி வர ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த ஒரு வழிப்பாதையில் போலீஸ் வாகனங்கள் சென்று வருகின்றன. இதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் நானும் இதுபற்றி தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். முதல்–அமைச்சர் தலையிட்டு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply