இலங்கைக்கு அடுத்தவாரம் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுற்று பயணம் குறித்து அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு கடந்த 1987ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தார். இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அவர் அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.

அதன் பிறகு, இலங்கை செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆவார். அவர் வரும் 13,14 ஆகிய 2 நாள்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இது குறித்து, இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறுகையில், "இலங்கை அதிபர் மேற்கொண்ட இந்திய பயணம் நன்றாக முடிந்தது. தற்போது நாங்கள் இந்திய பிரதமரின் சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். மோடியின் பயணம் தொடர்பாக எங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்றார்.

விதி முறைகளை மீறி சீனாவுடன் ஒப்பந்தம்: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத்பொன்சேகா கூறியதாவது:

இலங்கைக்கு இந்தியப் பிரதமர் முன்பே பயணம்செய்திருக்க வேண்டும். கடந்த 28 ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியப்பிரதமர் யாரும் வரவில்லை. இது மிக நீண்டகாலமாகும். எனினும் தற்போது இந்தியப் பிரதமரின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இலங்கைக்கு ஆதரவளித்து வருவதற்காக இந்தியாவுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இருநாடுகளும் அணி சேரா கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜ பட்ச ஆட்சியின் போது, இந்தியா-இலங்கையுடனான உறவில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. பல்வேறு விதி முறைகளை மீறி சீன அரசுடன் அதிக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் எங்கள் நாட்டுக்கு நல்லதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பழங்காலம் தொட்டே உறவுகள் இருந்து வருகின்றன என்றார்.

13–ந் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான தலைமன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை, சிங்களர்கள் பகுதியான கண்டி, அனுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த தமிழர்களுக்கு இந்தியா வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் மோடி இந்த வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ரூ. 60 கோடி செலவில் கட்டப்படும் பிரமாண்டமான இந்திய கலாச்சார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்துக்கும் செல்ல மோடி திட்டமிட்டுள்ளார். அங்குள்ள தமிழர்களையும், தமிழர் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் இலங்கையின் வடக்கு கோடியில் உள்ள தலைமன்னார் செல்கிறார். அங்கு தலைமன்னார் – மேதவச்சியா இடையே இந்தியா அமைத்து கொடுத்துள்ள ரெயில் பாதையில் புதிய ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

தலைமன்னார் தமிழர்களையும், தமிழ் தலைவர்களையும் சந்திக்கிறார்.

1987–ம் ஆண்டு ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்று வடக்குப்பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டது.

அப்போது விடுதலைப் புலிகளுடனான போரில் 1,140 இந்திய அமைதிப்படை வீரர்கள் பலியானார்கள். அவர்களது நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பிறகு கண்டி, அனுராதபுரம் நகரங்களுக்கு செல்கிறார். அனுராதபுரத்தில் மிகப் பழமையான மகாபோகி புத்தமடமும் அதனுள் கி.பி. 236–ம் ஆண்டில் கலிங்கத்து மன்னன் அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையால் கொண்டு வரப்பட்டு நடப்பட்ட போதி மரமும் உள்ளது.

இது தான் உலகிலேயே மிகப் பழமையான மரம் என்று சொல்லப்படுகிறது. இந்த போதி மரத்தடியில் பிரதமர் மோடி நின்று வணங்கி வழிபாடு செய்கிறார்.

கண்டியில் உள்ள மிகப்பழமையான கதிர்காமர் கோவிலுக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.

கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 3–வது இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 1973–ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், அவருக்குப் பின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயும் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியுள்ளனர்.

கொழும்பில் அதிபர் சிறிசேனாவுடன் பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சு நடத்துகிறார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் இலங்கையில் சீன முதலீடுகளையும், உதவிகளையும் குறைத்து இந்தியா ஆதிக்கம் செலுத்தும் வகையில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படுகிறது.

மோடி வருகையையொட்டி அதிபர் சிறிசேனா ஏற்கனவே பல சீன திட்டங்களை ரத்து செய்தும் நிறுத்தியும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply