ஹுரியத் பிரிவினைவாத அமைப்பு தலைவர் மஸரத் ஆலமை விடுதலை செய்தது தொடர்பாக மத்திய அரசிடம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை , பிரிவினை வாதத்தை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்தார்.

இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இது போன்ற நடவடிக்கையை, நாடாளுமன்றம் ஒருமித்த குரலில் கண்டிக்கிறது.

இந்தவிவகாரம் தொடர்பாக, நாட்டுக்கும், மக்களவைக்கும் ஓர் உறுதியளிக்கிறேன். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில், எது நடந்ததோ (மஸரத் ஆலம் விடுதலை) அது குறித்து, மத்திய அரசுடன் மாநில அரசு கலந்தாலோசிக்க வில்லை. மத்திய அரசிடம் அது குறித்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது.

பிரிவினைவாதத் தலைவர்களை ஆதரிப்பவர்கள், சட்டத்தை தவறாக பயன் படுத்துபவர்களுக்கு எதிராக நாம் ஒரேகுரலில் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம். வரும் நாள்களில், இந்தவிவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்போம். நாட்டின் ஒருமைப் பாட்டை காக்க நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக மௌனம்காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தவிவகாரத்தில், பாஜக மௌனம் காக்க எந்த காரணமும் இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் (ஜனசங்கத்தின் நிறுவனர்) உயிரைத்தியாகம் செய்த கட்சி, பாஜக.

தேசப்பற்று குறித்து, பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் பாடம் நடத்தவேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, அதுகுறித்து நாடாளுமன்றத்திடம் நாங்கள் தெரிவிப்போம்.

பிரிவினைவாத அமைப்பின் தலைவரை விடுதலை செய்திருப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது. நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எனது அரசு சகித்து கொண்டிருக்காது என்றார் மோடி.

Leave a Reply