டொயோடா- கிர்லோஸ்கர் நிறுவனம் தங்களது வாகனங்களை காமராஜர் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது என, காமராஜர் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காமராஜர் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் ஒன்றான காமராஜர் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 3.2 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. இதை ஆண்டுக்கு 6.9 கோடி டன்னாக உயர்த்த பல்வேறு திட்டங்களை அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

2011-ஆம் ஆண்டு முதல் இந்தத் துறைமுகம் வழியாக கார்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 6.95 லட்சம் கார்கள் கையாளப்பட்டுள்ளன.

இதற்கு வசதியாக 1.41 லட்சம் சதுர மீட்டர் அளவிலான கார் நிறுத்தும்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரேநேரத்தில் இங்கு சுமார் 12 ஆயிரம் கார்களை நிறுத்தமுடியும். மேலும், 4 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் கூடுதல்வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நிஸ்ஸான், போர்டு, ஹோண்டா, டைம்லர், அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இந்த துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்கின்றன.

இந்நிலையில் டொயோடா- கிர்லோஸ்கர் கூட்டு நிறுவனம் பெங்களூரு தொழிற் சாலையில் தயாராகும் கார்களை காமராஜர் துறைமுகம் வழியாக ஏற்றுமதிசெய்ய முடிவு செய்துள்ளது.

10 ஆண்டுகள் செல்லத்தக்க இந்த ஒப்பந்தம் சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் புது தில்லியில் கடந்த செவ்வாய்க் கிழமை கையெழுத்தாகியது. இந்நிகழ்ச்சியில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Leave a Reply