மத்திய அரசுடைய சரியான கொள்கைகளால், இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்படும் என்று மொரிஷியசில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நேற்று, அந்நாட்டு மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் மொத்தம் உள்ள 204

நிலக்கரி சுரங்கங்களில் இப்போது 20 சுரங்கள்களை மட்டுமே நாங்கள் ஏலத்துக்கு விட்டோம். அதன் மூலமாக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலக்கரி சுரங்கங்களை தன்னிச்சையாக முந்தைய காங்கிரஸ் அரசு ஏலத்துக்கு விட்டதால்தான், அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்தியாவை மத்திய அரசுடைய கொள்கைகளின் அடிப்படையில், சிறப்பாக வழிநடத்தினால் அங்கு ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும். இந்த பெரும் சுமையை நாங்கள் ஏற்று, ஊழலை ஒழிக்கும் பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம்.

முக்கிய விவகாரங்களில் எனது அரசு உடனடியாக முடிவுகளை எடுக்கிறது. நாட்டின் மின் சக்தி மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏலத்தை எனது அரசு துவக்கியது. புதிய இலக்குகளை எட்டுவதற்கும், இந்தியாவில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதற்காகத்தான் மேக் இன் இண்டியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதன் மூலமாக, குறைந்த செலவில் அதிக மனித வளங்களை நீங்கள் பயன்படுத்த முடியும். இதனால் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். சிவப்பு நாடா போட்டு உங்களை தடுப்பதற்கு பதிலாக, சிவப்பு கம்பளத்தை விரித்து இந்தியா உங்களை வரவேற்கிறது. அனைத்து நாடுகளும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு விருப்பம் கொண்டுள்ளன. பருவ நிலை மாற்றத்தை நாம் வெல்ல வேண்டியது மிகவும் அவசியம். இந்த விவகாரம் குறித்து இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா அதிக கவனம் செலுத்தும். இது தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்.

பருவ நிலை மாற்றம் குறித்து அனைத்து நாடுகள் இடையேயும் ஒத்துழைப்பு தேவை. இந்தியாவிலும் மொரிஷியசிலும் கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் மாற்றத்தை விரும்புகிறார்கள். வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த ஆட்சி மாற்றம்.

உலகின் எந்த நாட்டிலும், எந்தவொரு மூலையிலும் வேலை பார்க்கும் அளவுக்கு இந்தியா தனது மனிதவளத்தை தயார்படுத்திக் கொள்ளும். இதற்காக எனது அரசு திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் இளம் தலைமுறையினர், தங்களது நாட்டுக்கு புதிய அடையாளத்தை கொடுத்துள்ளனர். ஒரு நாடு முன்னேறுவதற்கு தொழில்நுட்பம் மிகவும் அவசியம். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply