யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்த தமிழர்களிடம் சகஜமாக பேசியதோடு, குழந்தைகளையும் அரவணைத்தது தமிழர்களை நெகிழவைத்தது.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் பொதுநூலகத்தில் இடம் பெற்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டபிறகு வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக் காரவுடன் மதிய விருத்தில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப் பாணம் கீரி மலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும், நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் , தமிழ் கலாச்சார முறைப்படி, பால்காய்ச்சி வீடுகளை வழங்கினர்.

அப்போது, ஒவ்வொரு வீடாக சென்ற பிரதமர் , அங்கிருந்த தமிழர்களிடம் பேசினார். அவர்கள் தங்கள் குறைகளை அப்போது மோடியிடம் கூறினர். இதனை மோடி கவனமாக கேட்டதோடு, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்… என்றார் மோடி.

முன்னதாக, தனது பேச்சின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் துவக்கினார். அது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய மோடி, இன்னும் அதிக அளவில் இந்திய அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசின் உறுதியையும் எடுத்துரைத்தார். மேலும் அங்கிருந்த குழந்தைகளின் கன்னத்தை கிள்ளிய பிரதமர் , அவர்களிடம் கைகுலுக்கி கொண்டார்.

Leave a Reply