சமுதாய வானொலியை தொடங்க உரிமம்பெறுவதற்கு, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக்கபட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசியசமுதாய வானொலி சம்மேளனத்தின் 5-வது மாநாடு புதுதில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் விமல் ஜுல்கா பேசியதாவது: சமுதாய வானொலி திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார்.

வானொலியில் மோடி உரை நிகழ்த்தும் "மன் கீ பாத்' நிகழ்ச்சி, நாட்டின் மூலை முடுக் கெல்லாம் சென்றடைந்துள்ளது.

முக்கிய ஊடகங்களில் எப்போதாவது தனது குரலைப் பதிவுசெய்யும் கிராமப்புற சமுதாயங்களை முன்னேற்றுவதற்கு சமுதாய வானொலி திட்டம் முக்கியமானதாகும்.

அந்த வானொலியைத் தொடங்குவதற்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை, தொடர்ச்சியாக எளிமையாக்கி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக, உரிமத்துக்காக இணையதளங்களில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்துவருகிறோம்.

அலைக்கற்றையானது பொது மக்களின் சொத்து , அது அவர்களுக்கே பயன்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளில் தேசியப்பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உதவுவதில் சமுதாய வானொலிகளின் பங்கு மிகப்பெரியதாகும். களநிலவரம், ஆலோசனைகளை அவை தெரிவிக்கின்றன.

அகில இந்திய வானொலியின் செய்திகளை அடிப்படையாக கொண்டு அல்லது அதனை மொழி மாற்றம் செய்து, சமுதாய வானொலிகளில் செய்திகளை ஒலிபரப்ப அனுமதிக்கலாம் என்று "டிராய்' பரிந்துரைத்துள்ளது.

நாடுமுழுவதும் 400 சமுதாய வானொலிகளை தொடங்க இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 179 சமுதாய வானொலிகள் தொடங்கப் பட்டுள்ளன என்று செய்தி, ஒலிபரப்பு அமைச்சகச் செயலாளர் தெரிவித்தார்.

சிறப்பான திட்டம்: முன்னதாக, இந்தமாநாட்டைத் தொடங்கி வைத்து, அருண்ஜேட்லி பேசியபோது, "நாடு முழுவதும் சமுதாய வானொலிகளை தொடங்குவது என்பது சிறப்பான திட்டம்' என்றார்.

ஒலிபரப்பாளர், தகவல் பரப்புபவர், தகவல்களை அறியவிரும்பும் நேயர் ஆகியோரை இணைக்கும் பாலமாக சமுதாய வானொலிகள் இருக்கும் என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

Leave a Reply