பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தருகிறது, என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

நெல்லை கிழக்குமாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று நெல்லைக்குவந்தார். அவர் வண்ணார் பேட்டை சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை தமிழர்கள் வரலாற்றில், பிரதமர் மோடியின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதியநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு 13–வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் மோடி பயணம்குறித்து விமர்சனம் செய்கிறார்கள். எந்த ஒருமுயற்சியும் உடனடியாக பயன்தராது. பிரதமர் செய்திருப்பது ஒருமுயற்சி, இதற்கு பலன்கிடைக்க நாளாக, நாளாக தெரியும்.

இலங்கை பயணம் தொடர்பாக மோடி என்னிடம் பேசினார். அப்போது இலங்கை தமிழர்களின் தேவை குறித்து தெரிவித்தேன்.

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, மோடி சந்தித்தது குறித்து விமர்சித்து உள்ளார். எந்த ஒருநாட்டுக்கு தலைவர்கள் செல்லும்போதும் அங்கு ஆட்சியில் இருப்பவர்களையும், ஆட்சியில் இருந்தவர்களையும் சந்திப்பது மரபு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் பிரதமரை சந்திப்பதுபோல் காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்கிறார்கள். அதே போல்தான் மோடி –ராஜபக்சே சந்திப்பும் நடந்துள்ளது.

இலங்கை தமிழர்கள் சகஜநிலையில் சுதந்திரமாக வாழ வேண்டும். அங்குள்ள ராணுவம் விலக்கப்பட வேண்டும். இதைத்தான் பா.ஜனதா அரசு இலங்கையிடம் வலியுறுத்துகிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில், அதிமுக. உள்ளிட்ட பல கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்தார்கள். அதன்படி 6 திருத்தங்களை கொண்டுவந்த பிறகுதான், நாட்டின் நலன் கருதியே அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அதிமுக. ஆதரித்து இருப்பதை வரவேற்கிறோம். அரசியல் காரணத்துக்காக மட்டுமே இதனை மற்றகட்சிகள் விமர்சிக்கிறார்கள்.

பாரதி பிறந்த மண்ணில் சாதியைசொல்லி மோதல்கள் நடப்பது வேதனைக்குரியது. இதன் அடிப்படை காரணத்தை ஆய்வுசெய்ய வேண்டும். போலீஸ் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகும், லஞ்சம், ஊழலுக்கு எதிராக பெரியமாற்றம் வரவில்லை.

Leave a Reply