தமிழக மீனவர்கள் பிரச்னைதொடர்பாக மக்களவையில் விவாதிக்க தயார் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் புதன் கிழமை குரல் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், தீர்வுகாணப்படாத தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கவேண்டும் என்று கோரினர்.

இதையடுத்து, பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இப்பிரச்னை குறித்து விவாதிக்க தயார் என்று தெரிவித்தார்.

மக்களவை புதன்கிழமை காலை அதன் தலைவர் சுமித்ராமகாஜன் தலைமையில் கூடியதும் அவை அலுவல்கள் வழக்கம் போலத்தொடங்கின. கேள்வி நேரம் முடிந்த சிறிதுநேரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அண்மையில் மோரீசஸ், செஷல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட அரசு முறைப்பயணம் குறித்த விளக்க அறிக்கையை அவையில் வாசித்தார்.

அப்போது, இலங்கைப் பயணத்தின் போது இருநாடுகளுக்கு இடையேயான முக்கியமான ஒத்துழைப்புகள், அந்நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வு காண மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சுஷ்மா ஸ்வராஜ் எடுத்துரைத்தார்.

பிரதமர் இலங்கைப் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் அதிகாரிகளை சந்தித்துப்பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகுறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்தப் பிரச்சினையை எழுப்பிய மோடி, “இது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் தொடர்புடைய சிக்கலான பிரச்சினை. எனவே இதற்கு இரு நாடுகளும் நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்தப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு மீனவ சங்கங்களும் உடனடியாக சந்தித்து இருதரப்புக்கும் ஏற்ற உடன் பாட்டை செய்துகொள்ள முன்வர வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதுதவிர, அமைதி, மறு வாழ்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிய‌ இலங்கை அரசின் புதியபயணம் வெற்றிபெற தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் மோடி தெரிவித்தார்.

மேலும், இலங்கை தமிழர் உட்பட அனைத்து இனமக்களின் மேம்பாட்டுக்காகவும், சமத்துவ வாழ்க்கை, சமநீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டும் இலங்கை அரசின் முயற்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும்.

தமிழர்களுக்கு சமஅதிகாரம் வழங்க வகைசெய்யும் 13-வது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப் படும் என்று தான் நம்புவதாகவும் மோடி கூறினார்.

மேலும் விதி எண் 193-இன் கீழ் விவாதம் நடத்த உறுப்பினர்கள் விரும்பினால், நான் தயாராக உள்ளேன்' என்று சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார். இதையடுத்து, மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், "இதுகுறித்து விவாதிக்க விதி எண் 193-இன் கீழ் நோட்டீஸ் அளித்தால் நேரம் ஒதுக்கப்படும்' என்றார். இதைத்தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைதியடைந்து தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர்.

Leave a Reply