ஏழை சிறுவர்களின் கல்விக்காக, தான்சேமித்து வைத்திருந்த 107 ரூபாயை, தனது பிறந்த நாளின்போது, பிரதமர் நிவாரண நிதிக்கு 6 வயது சிறுவன் அனுப்பியுள்ளான். அவனைப்பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தானே கையெழுத்திட்டு பாராட்டுகடிதம் அனுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், திவாஸ் மாவட்டத்தை சேர்ந்தவன் பாவ்யா. ஆறுவயதாகும் இந்த சிறுவன், யுகேஜி படித்து வருகிறான். தன்னுடைய பிறந்த நாளான ஜனவரி 25ஐ, ஏழைகளின் நலனுக்காக கொண்டாட விரும்பிய அவன், அன்று தனது உண்டியலை ஒரேபோடாக போட்டு உடைத்தான். அதில் இருந்த காசுகளையெல்லாம் சேகரித்தபோது, 107 ரூபாய் சேர்ந்திருந்தது. இதையடுத்து, தனதுதாத்தா சுனில் ஆதேவின் உதவியோடு, இந்த 107 ரூபாயை ஏழை சிறுவர்களின் கல்விக்காக பிரதமர் நிவாரணநிதிக்கு அனுப்பி வைத்தான் பாவ்யா. மேலும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினான். இந்த விவரங்களை அறிந்த பிரதமர் , ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். "பாவ்யா, ஏழை சிறுவர்களின் நலனுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு நீ பணம் அனுப்பிவைத்ததற்கு நன்றி. நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் மீது அக்கறை கொண்டவனாக நீ எப்போதும் இருக்கவேண்டும் என்று, பாவ்யாவுக்கு மோடி பதில்கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் கடந்த 7ம் தேதி, சிறுவனின்கைக்கு கிடைத்தது.

இதுபற்றி, அவன் கூறும் போது, "நான் பள்ளிக்கு செல்லும் போதெல்லாம், ஏழை குழந்தைகளை பார்ப்பேன். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பேன். எனவேதான், என்னுடைய தாத்தாவின் உதவியோடு, மோடிமாமாவுக்கு கடிதம் எழுதினேன். அத்துடன், ஏழை சிறுவர்களின் நலனுக்காக 107 ரூபாயை அனுப்பிவைத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட மோடி, நான் பணம் அனுப்பி வைத்ததற்காக, நன்றிதெரிவித்து எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றான்.

பாவ்யாவுடைய தாத்தா சுனில் ஆதே, கூறுகையில், "எப்போது பார்த்தாலும் கேள்விகளை கேட்டுகேட்டு, என் பேரன் என்னை படாதபாடு படுத்துவான். ஒரு சமயம் அவனை பள்ளிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தேன். அப்போது, ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு போகாமல் ஏன் இங்கேயே இருக்கிறார்கள் தாத்தா, என்று கேட்டான். அதற்கு, பணம் இல்லாததால் அவர்கள் செல்லவில்லை என்று கூறினேன்.

இந்தசம்பவம் அவனுடைய மனதில் நன்றாக பதிந்து விட்டது. இதையடுத்து, ஏழை சிறுவர்களின் நலனுக்காக உண்டியலில் காசுகளை சேமித்தான். அவற்றை பிரதமருக்கு அனுப்ப நான் உதவிசெய்தேன் என்றார். 6 வயது சிறுவனின் இந்த நடவடிக்கை, மத்தியப் பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது அனுப்பி யிருக்கும் 107 ரூபாயைவிட அதிக பணத்தை சேமித்து, அடுத்த ஆண்டு பிரதமருக்கு அனுப்ப, பாவ்யா விருப்பம் கொண்டுள்ளான். இதற்காக, இப்போது இருந்தே உண்டியலில் காசுகளை சேமிக்க தொடங்கி விட்டான் பாவ்யா.

Leave a Reply