தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல் படுத்த தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

"மீத்தேன் எரிவாயுத்திட்ட உத்தரவை கைவிடவேண்டும் என்று கோரி காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு மனு அனுப்பினர்.

இந்நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

"தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரி வாயு எடுப்பதற்காக ஜி.இ.இ.சி.எல் நிறுவனத்துக்கு 667 சதுர கி.மீ. பரப்பளவில் அனுமதி அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகத்தின் காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றை சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கம்சார்பில் அனுப்பப்பட்ட மனுக்கள் பிரதமருக்கும், தமிழக ஆளுநரின் செயலாளர் மூலம் எங்கள் அமைச்சகத்துக்கும் கிடைக்க பெற்றன.

இதற்கிடையே, இந்த திட்டத்துக்கான ஆவணங்களை ஜிஇஇசிஎல் நிறுவனம் மத்திய அரசிடம் இது வரை அளிக்கவில்லை. மேலும், இதற்கான காலக்கெடு 2013, நவம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஒப்பந்தக்காரர் இப்பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளை தொடங்காததால், ஒப்பந்த ஷரத்துகளின் படி இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வருகிறது' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply