நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் எதிர்க் கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன , அதன் மூலம் விவசாயிகள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 6-வது தொடரில் விவசாயிகளுக்காக பிரதமர் மோடி உரையாடினார். இதில் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அவர் பேசியதாவது.

, "கடந்த 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலச்சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அந்தச்சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இருந்த குறைகளை களைந்திடுவதுடன், விவசாயிகள், கிராமங்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தற்போதைய நிலமசோதாவில் விவசாயிகளுக்கு பயன்தரக் கூடிய எத்தகைய மாற்றத்தையும் சேர்க்க அரசு தயாராகவே உள்ளது. இதை ஏற்கெனவே நாடாளு மன்றத்தில் நான் உறுதிபட தெரிவித்துள்ளேன்.

விவசாயிகளின் காவலனாக மக்கள் முன் வலம்வருவோர் போராட்டங்களை நடத்துகிறார்கள் . 120 ஆண்டு பழமைவாய்ந்த சட்டத்தை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கையகப்படுத்த பயன் படுத்தி வந்தனர். இப்போது 2013-ம் ஆண்டு சட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கும் பாஜக கூட்டணி அரசை இலக்குவைத்து செயல்படுகிறார்கள்.

புதிய மசோதாவில் 2013-ம் ஆண்டு சட்டத்தில் உள்ள அதே இழப்பீடு அம்சங்கள்தான் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியவை என்பதெல்லாம் பொய் .

அரசு அல்லது அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயி ஒப்புதல் தேவையில்லை என்கிற பிரிவு புதியசட்டத்தில் உள்ளது. இதேவிதி முந்தைய சட்டத்திலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், எல்லாவித பொய்களும் புதியசட்டம் மீது பரப்பப்படுகிறது. விவசாயிகள் தவறாக வழிகாட்டப் படுகிறார்கள்.

2013-ம் ஆண்டு சட்டத்தில் குறைபாடுகள் இருந்தன. அவற்றை சரி செய்து கிராமங்கள், விவசாயிகள், எதிர்கால சந்ததியினருக்கு நற்பலன் கிடைக்க செய்வதும், அவர்கள் மின் சாரம், குடிநீர் பெற வழிவகுப்பதுமே இந்த அரசின் நோக்கம் . புதிய மசோதாவில் குறை இருப்பதாக யாராவது கருதினால் அதை சரிசெய்ய அரசு தயாராகவே உள்ளது.

எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களை விவசாயிகள் நம்பி விடக்கூடாது என்பதே எனது வேண்டுகோள். என்னை நம்புங்கள், உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அவசரகதியில் நில மசோதாவை நிறைவேற்றியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, விவசாயிகள் நலன் கருதி ஆதரித்தது. அவசரத்தில் செய்யும் எதிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். முந்தைய அரசு மீது நான் குறை கூறவில்லை. விவசாயிகள், அவர்களது குழந்தைகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே, சட்டத்தில் குறைகள் இருந்தால் அதை சரிசெய்வோம். இதுதான் எங்கள் முன்னுரிமை.

எந்த மாநிலமாவது முந்தைய சட்டத்தையே ஏற்கத் தயார் என்றால் அப்படியே செய்யட்டும். அது அவர்கள் விருப்பம்.ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சுரங்கம் போன்ற அரசின் செயல்பாடுகளுக்கு அதிக நிலம் தேவைப்படுகிறது. அரசின் இதுபோன்ற 13 அம்சங்கள் 2013 சட்டத்தில் இடம்பெறாமல் போனது.

எனவே, இத்தகைய பிரிவுகளுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 120 ஆண்டு பழமை வாய்ந்த சட்டத்தின் படிதான் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். இது மிகப் பெரிய குறைபாடு ஆகும். புதிய சட்டத்தின்படி இதை சரிசெய்து இந்த 13 பிரிவுகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்க வகை செய்யப் பட்டுள்ளது. இவை விடுபட்டிருந்தால் அதிகாரிகளுக்குத் தான் ஆதாயம்.

மேலும், நிலம்வழங்கும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். முதலில் நிலம் கையகப்படுத்தும் போது அரசு நிலம்தான் கவனத்தில் கொள்ளப்படும். அதற்குப்பிறகு விளைச்சலுக்கு உதவாத இடம், கடைசியாகத் தான் விவசாய நிலம். எனவேதான் விளைச்சலுக்கு உதவாத நிலம் பற்றி கணக்கு எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இழப்பீடு தொகையை குறைப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதாக என் மீது பொய் பரப்புகிறார்கள் . அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். நான் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. விவசாயிகள் எப்போதும் வறியவர்களாகவே இருக்கவேண்டும். நாடு வளம் பெறக் கூடாது என சதி நடக்கிறது. இதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். இந்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானதல்ல" என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply