நாட்டு நலன்கருதி நிலம் கையகப்படுத்தும் சட்டமசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புறவளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலக்கரி சுரங்கம், கனிமச்சுரங்க மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் கையகப் படுத்துதல் சட்டம் மிகவும் அவசியம். இந்தமசோதா சட்டமானால் நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும். அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆதாயத்தை எதிர்பார்த்து இந்த சட்டத்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் மீதான அக்கறையால் இந்தச்சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏராளமான மசோதாக்களுக்கு திமுக ஆதரவு அளித்தது. அப்போது ஆதாயத்தை எதிர்பார்த்துத்தான் திமுக ஆதரவு அளித்ததா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: சட்டம்- ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

மத்திய பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் உள்ளன. நடைபாதைகள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வங்கியில் கடன்பெற வழி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீத்தேன் எரி வாயு எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பாஜக அரசு துணையாக இருக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply