இன்று தமிழ்நாட்டில் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது; மதவெறி, சாதிவெறியர்களுக்கு இந்த ஆட்சி 'நம் ஆட்சி' அதனால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு வந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த து முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய தலைவர்கள் ராமகிருஷ்ணன், முஸ்லீம்கள் அமைப்புகள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (தாக்குதல்தானா?) அவர்கள் அரசியல் செய்வதற்கு வழியைக் காட்டியிருக்கிறது.

இவர்களுடைய ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவான கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. உண்மையிலேயே இவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு, ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள்தானா என்று பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் கலைந்துவிடுகிறது.

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை ஆராய்வோம்.

[1] 1950ல் வெளியான ஒரு கார்ட்டூன் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் அது சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டக் குழு நத்தைபோல நகர்ந்துகொண்டிருக்கிறது. சீக்கிரம் எழுதப்படவில்லை. காலதாமதம் ஆகிறது. அதனால் அன்றைக்கு குழு தலைவராக இருந்த அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிக்கின்ற மாதிரி ஒரு கார்ட்டூன்.

இந்த கார்ட்டூன் உண்மையிலேயே இப்போது பாடபுத்தகத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சேர்க்கப்பட்டது. அதை நானும் இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறோம். ஏன் அன்றைக்கு பாஜக கூட அதை பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது.

Slide1

இந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது, தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி திருமாவளவன் அன்று பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தார். பல்வேறு தலித் அமைப்புகள் போராடினர். அன்றைய மத்திய அமைச்சர் கபில் சிபில் இதற்காக மன்னிப்பு கேட்டார். கார்ட்டூனை அனுமதித்த இருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர். கார்ட்டூனை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்று அப்போது திருமாவளவன் சொல்லவில்லை. தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லித்தான் போராடினார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரவாதிகள்!

[2] 2008ல் தினமலர் இதழ் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகட்சிகாரர்கள் தினமலர் இதழ் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பல பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். காவலாளி இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தினமலர் வெளியிட்டது கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று அப்போது அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை!

சொன்னால் நம்புங்கள் இவர்கள் ஊடக சுதந்திரவாதிகள்!

[3] சுந்தர ராமசாமி பிள்ளைகெடுத்தாள் விளை என்ற ஒரு சிறுகதையை 2005ல் எழுதினார். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு தலித் அமைப்புகளிடம் எழுந்தது. ஏனென்றால் அதில் தலித் பெண்கள் பற்றி மிக மோசமாக எழுதப்பட்டிருந்தது என்று சொல்லி எதிர்த்தார்கள். டாக்டர் அம்பேத்கர் மையம் என்ற அமைப்பு இலக்கிய வன்கொடுமை எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். சுந்தர ராமசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எஸ்ஸி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றி அச்சுறுத்தினார்கள். ஒரு எழுத்தாளரின் கருத்து சுதந்திரம் அது என்று அப்போது இவர்கள் பேசவில்லை.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் படைப்பாளர்களின் பாதுகாவலர்கள்!

[4] புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி என்ற சிறுகதை சென்னை பல்கலைக்கழக பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இந்த சிறுகதை தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லி தலித் அமைப்புகள் போராடினார்கள். பின்பு சென்னைபல்கலைக்கழக பாடத்திலிருந்து அந்த சிறுகதை நீக்கப்பட்டது.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

[5] எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு பத்திரிகைக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில் தலித்துகளை அவமரியாதை செய்துவிட்டார், அந்த பேட்டி தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி மதுரையில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ன வென்று தெரியாதவர்கள் இன்று கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் வேடிக்கை.

[6] 2007ல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த எச்.ஜி.ரசூல் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார்.இஸ்லாத்தில் குடி பண்பாடு என்பது பற்றி எழுதினார். உடனே முஸ்லீம்கள் பொங்கி எழுந்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? அவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்றுவரை ஊர்விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். இதை தவறு என்று யாராவது சொன்னார்களா? இத்தனைக்கும் அவர் இடதுசாரி கலை இலக்கிய பெருமன்ற அமைப்பைச் சேர்ந்தவர். பெருமாள் முருகனுக்காக நாடுமுழுவதும் கண்டனக்கூட்டங்களை நடத்திய இவர்கள் கூட தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சினையை பேசவில்லை. ஜமாத்தை எதிர்த்து போராடவும் இல்லை. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம். எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ரசூலுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. ஒரு கருத்து சுதந்திரவாதிகள் கூட இஸ்லாமியர்களை கண்டிக்கவில்லை. போராடவும் இல்லை.

Slide6

[7] தஸ்லீமா நஸ்ரின் பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்று அவர்கள் எவ்வளவு ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியும். அவர்கள் நடத்தும் எந்த ஒரு கூட்டமும் முஸ்லீம்களால் வன்முறை உள்ளாக்கப்படும். அவர்கள் பெண் என்றுகூட பார்க்காமல் அடிபட்ட சம்பவமும் உண்டு. இதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து சுதந்திரம்.

[8] 2013ல் சென்னை பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமீனா வதூத் என்கிற இஸ்லாமிய பெண்ணியவாதி பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மட்டுமல்ல இஸ்லாமிய கல்லூரியான எஸ்ஐஈடியிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? சென்னை பல்கலைகழகத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்தது. அவர் பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்தது. இறுதியில் அந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[9] விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. நடிகர் கமல் பேனருக்கு தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது. ராமநாதபுரத்திலேயும் கோயமுத்தூரில் உள்ள திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திண்டுக்கல்லில் அரசு பேருந்துமீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறையில் அவர்கள் என்ன புகார் கொடுத்தார்கள் தெரியுமா? படத்தை தடை செய்யணும். இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இதுதான் அவர்களுடைய புகார்.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுமுன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி நடத்தியது. அதில் பெருமளவு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது நடிகர் மணிவண்ணன் என்ன தெரியுமா சொன்னார்? விஸ்வரூபம் பட பிரச்சினையில் நான் முஸ்லீம்களை ஆதரிக்கிறேன் என்று சொன்னார். இவர் முற்போக்குவாதியாக அறியப்படுகிறவர்.

எங்களுக்கு படம் போட்டுக் காட்டணும் என்று மிரட்டல் விடுத்தனர். இன்றைக்கு பெருமாள் முருகன் மாதிரி அன்றைக்கு கமலும் நான் வேறு நாடுகளுக்கு சென்றுவிடுவேன் என்று சொன்னார். ஆனால் கடைசியில் அவர் படத்தை போட்டு காண்பித்தார். சில சொற்களும், சில காட்சிகளும் நீக்கப்பட்டன. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[10] இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒருவாரத்திற்கு மேலாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் முஸ்லீம்அமைப்பினர். அங்கிருந்த பெருவாரியான வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான். அந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக மக்கள் பட்ட அவதிகள், தொல்லைகள் நாம் மறக்க முடியாது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

Slide10

[11] உங்களுக்கெல்லாம் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களைத் தெரிந்து இருக்கும். அவர் ஒரு முஸ்லீம். அப்துல் ஹமீது அவருடைய நிஜப்பெயர். இந்து பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார். அவர்கூட கருத்துசுதந்திரத்தைப் பற்றி பேசினார். பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பேசினார். கருத்து சுதந்தித்தை நசுக்கும் செயல். இந்துத்துவ பேயாட்டம் என்றெல்லாம் பேசினார். ஆனால் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் கார்ட்டூன் விஷயத்தில் அவரின் உண்மை முகம் வெளிவந்தது.

கருத்து சுதந்திரம் என்பது வரையறை செய்யப்பட வேண்டும். நபிகள் பல்லாயிரம் முஸ்லீம்களின் ஐகான். அவரை கொச்சைப்படுத்தக்கூடாது என்று சொன்னார். அதாவது நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என்ற சொன்னார்.

இதுமட்டுமல்ல அவர் தொலைக்காட்சி விவாதத்தில் ஒன்று சொன்னார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தடை செய்யவேண்டும் என்றுசொன்னார். அப்படங்கள் மக்களை கெடுக்கின்றனவாம். நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. ஆனால் இராமரை, கிருஷ்ணரை கொச்சப்படுத்தலாம். இதுதான் இந்த முஸ்லீம் வெறியனின் கருத்து சுதந்திரம்.

[12] இன்னொருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நுழைந்து மாநில அளவில் பதவி பெற்று முஸ்லீம் அடிப்படைவாதத்தை தமிழகத்தில் ஊன்றி வருபவர் ஷாநாவாஸ். இவர் ஒரு மதஅடிப்படைவாதி. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய முகநூலை பாருங்கள். ஐஎஸ்ஐஎஸ் போராடுவது மண்ணுக்காக. அவர்களுடைய மக்களுக்காக. அவர்கள் போராளிகள் என்று முகநூலில் பதிவிடுகிறார். அது மக்கள் போராட்டம் என்று சொல்கிறார். நேதாஜி ஆயுதம் ஏந்தி போராடினால் போராளி என்று சொல்கிறீர்கள். அதையே ஈராக்கிகள் செய்தால் தீவிரவாதியா என்று கேள்வி கேட்கிறார்.

அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளையும் ஐஎஸ்ஐஎஸ்யும் இணைத்து அவர்களை போராளிகள் என்று சொல்கிறார். சூழல்கருதி முஸ்லீம் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவு தர தயங்குகின்றனர் என்று வெளிப்படையாக முகநூலில் எழுதுகிறார். இவர்தான் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரவாதிகள்!

கம்யூனிஸ்டுகளின் கருத்து சுதந்திரம் என்ன தெரியுமா?

[13] 1990ல் கல்கத்தா பற்றிய ஒருபடத்தை எடுத்தார்கள். படத்தின் பெயர் சந்தோஷநகரம். (city of joy) 20 ஆண்டுகள் ஆகியும் கம்யூனிச ஆட்சியில் மக்கள் எவ்வளவு பசியும், பட்டினியுமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த படத்தின் கரு. விடுவார்களா கம்யூனிசவாதிகள்? படக்குழுவினரை ஓட ஓட அடித்தார்கள். வன்முறை மொத்த உருவமாக அன்று இருந்தார்கள். இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[14] ரஷ்யாவில் லெனின் பற்றி அலெக்சாண்டர் ஸோக்குரோய் ஒரு படம் தயாரித்தார். படத்தின் பெயர் டாரஸ் (ரிஷப ராசி) ரஷ்ய திரைப்பட தணிக்கைகுழு தணிக்கை செய்து அங்கு வெளியிடப்பட்டது. பல்வேறு நாட்டிலும் வெளியிடப்பட்டது. கொல்கத்தா திரைப்பட விழாவில் அந்தப் படம் திரையிட்டபோது மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அந்த படத்தில் நடித்த கதாநாயகனைக்கூட விடவில்லை. ஒரே வன்முறை. இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[15] சில ஆண்டுகளுக்கு முன்பு ஒச்சாயி என்றொரு படம் வந்தது. முக்குலத்தோரின் தெய்வமான ஒச்சாயி என்ற பெயரையே அந்த படத்திற்கு தலைப்பாக வைத்திருந்தார்கள். ஒச்சாயி என்ற பெயர் தமிழ்பெயரா என்று கேள்வி கேட்டு வரி விலக்கு அளிக்க தயங்கியது. அப்போது நம்ம காம்ரேட் தா.பாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ்நாட்டில் ஒச்சாயி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்காண தாய்மார்கள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் அவர்களையெல்லாம் அவமதிக்கிற செயலாக இது இருக்கிறது என்று அறிவித்தார்.

அதாவது அவர் சார்ந்த சாதிக்கு அவர் வக்காலத்து வாங்கலாம். ஆனால் திருச்செங்கோட்டு பெண்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடாது? இதுதான் கம்யூனிஸ்ட்காரர்களின் கருத்து சுதந்திரம்.

Slide18[16] துரை.குணா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை சார்ந்தவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு புத்தகத்தை எழுதினார். ஊரார் வரைந்த ஓவியம் என்று. அந்த புத்தகத்தை குளத்திரான்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் தங்கராஜ் எதிர்க்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த எல்லா தலித்துகளும் மற்ற சமூக மக்களும் இந்த நூலை எதிர்க்கிறார்கள். இதில் என்ன செய்தி? ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு தலித். அது ஒரு செய்தியா? இல்லை. அவர் ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இதுதான் செய்தி.

அவர் சொல்கிறார்:- எழுத்தாளர் துரை.குணா தவறான தகவல் தந்திருக்கிறார். அதனால் ஊரில் ஒற்றுமையாக இருக்கிற மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இந்த புத்தகத்தை தடை செய்யணும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதுமட்டுமல்ல

இந்த புத்தகத்துக்கு ஒருவர் அணிந்துரை எழுதியிருக்கிறார். பெயர் சின்னதுரை. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? தெரியாமல் அணிந்துரை எழுதிவிட்டேன். அதில் கொச்சையாக எழுதி இருப்பவற்றை நீக்கும்படி குணாவிடம் சொல்லியிருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் யார் தெரியுமா? இவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில் இந்த புத்தகத்தையும் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அவர்கள் யாருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லை. இதையும் இந்துத்துவா ஆட்கள்தான் எதிர்க்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

[17] முற்போக்கு 'தி இந்து' பத்திரிகை பிரான்சில் இஸ்லாமிய தாக்குதலுக்கு உள்ளாகிய சார்லி ஹெப்டோ பத்திரிகையை, கருத்து சுதந்திர போராளிகள் தங்கள் கையில் வைத்திருப்பது போல ஒரு படத்தை வெளிட்டது (தி இந்து சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறுபிரசுரம் செய்யவில்லை – அந்தத் துணிச்சலை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன? மக்கள் கையில் வைத்திருந்த பத்திரிகை பிரதியில் அந்தக் கார்ட்டூன் லேசாகத் தெரியும் படி இருந்தது, அவ்வளவு தான்). இதற்குக் கூட தமிழகத்தின் முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுநாளே தொடை நடுங்கிக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்டது தி இந்து. ஆனால் இதே பத்திரிகை பெருமாள் முருகனுக்கு கட்டற்ற கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கெட்கமில்லாமல் ஆதரவு தெரிவிக்கிறது.

அதாவது சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற இவர்கள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் கூட கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய கருத்து சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

[18] நாடார் பெண்கள் பற்றி சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் மேலாடை அணிவது பற்றிய தகவல் சொல்லப்பட்டது. நாடார்கள் கொந்தளித்தார்கள். அதை நீக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குரல்கொடுத்தார். மத்திய இணை அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.. ஏனென்றால் நாடார்களின் மனம் புண்படுகிறது. அதை நாங்களும் வழிமொழிகிறோம். ஆனால் திருச்செங்கோட்டு மக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா? தாலி விஷயத்தில் இந்துக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா?

[19] இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ரெட் சாரி என்ற ஆய்வு நூலை எழுதினார். சோனியா காந்தியைப் பற்றிய நூல் அது. அந்நூலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. மணிஸ் திவாரி மிரட்டினார். அந்நூலை காங்கிரஸ்காரர்கள் கொளுத்தினார்கள். எழுத்தாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதான் இவர்களுடைய கருத்து சுதந்திரம்!

Slide21

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கருத்து சுதந்திர பின்னணி

இந்தியாவின் மரபுகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் கொச்சைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

[20] பெருமாள் முருகன் எழுதியிருக்கிற நாவலை ஏன் எதிர்க்கிறோம்? ஆய்வு என்ற பெயரில் திருச்செங்கோட்டு பெண்களை பச்சையாக தேவடியாள் என்று கூறியிருப்பதால்.

நாம் ஆதாரம் கேட்டால் மகாபாரதத்தில் இப்படி இருக்கிறது, பழங்குடி சமூகங்களில் அப்படித் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தினமணி கூட அப்படித்தான் ஒரு தலையங்கம் எழுதியது.

எல்லா அலுவலகங்களிலும் பெண்களுக்கு பாலுறவு தொந்தரவு கொடுக்கப்படுகிறது. கம்யூனிச அலுவலகத்திலும் தினமணி அலுவலகத்திலும் அப்படி கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ஆதாரம் கேட்க மாட்டார்களா? அப்போது எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று நாம் பொதுவாக சொன்னால் அது சரியாக இருக்குமா? ஆதாரம் காட்ட வேண்டாமா? இதைத்தானே பெருமாள் முருகனிடம் திருச்செங்கோட்டு மக்கள் கேட்டார்கள்?

பெருமாள் முருகன் எழுதுகிறார் – "வீதிகளிலே சாயங்காலம் முதலே அலையத் தொடங்கிவிட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமே இல்லை. அந்தப் பெண்கள் நன்றாக சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப்போனார்கள். இன்னிக்கு நம்மள எவன் பார்க்குறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்குத் தேவடியாள்தான் என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்". (பக்.87, மாதொருபாகன்)

ஆனால் உண்மை என்ன? 1929ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் இது ஒழிக்கப்பட்டது. எல்லா அலுவலங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. அதன்படி எல்லா தேவதாசி இனாம்களை விடுவித்து, அவர்களை கோயில் பணியின் பொறுப்பிலிருந்து விடுவித்தனர் என்று முத்துலட்சுமி ரெட்டி தன் வாழ்க்கை சரிதத்தில் கூறுகிறார்.

இந்த நாவல் 1940ல் நடப்பதாக தினமலரில் பெருமாள் முருகன் கூறியுள்ளார். அப்படியென்றால் 1940ல் தேவதாசி முறை இருந்ததா? நீதிக்கட்சி தேவதாசி சட்டத்தை கொண்டு வந்து ஒழித்தது என்று பெருமையடிக்கும் திராவிட கழகம் இதற்கு என்ன சொல்லப்போகிறது?

அதாவது கோயிலுக்கு வரும் பெண்கள் எல்லோரும் தேவடியாள்கள் என்பதை வாசகர் மனதில் பதிய வைக்கத்தான் இதை பெருமாள் முருகன் சேர்த்திருக்கிறார். 11வருடத்திற்குமுன் தடைசெய்யப்பட்ட தேவதாசி முறையை இதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஏன் இவர் இப்படி எழுதுகிறார்? இதனுடைய பின்னணி என்ன?

இவர் 2013ல் தமிழ்பதிப்பான தி இந்துவில் சைவ சமயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சங்ககால தமிழ்நூல்கள் வெளிவராமல் இருந்ததற்கு காரணம் சைவ சமயம்தான் என்று எழுதினார். அந்த கட்டுரையை படித்தால் ஒருவனுக்கு நிச்சயமாக சைவ சமயத்தின்மேல் வெறுப்புதான் உண்டாகும். தமிழுக்கும் சைவத்திற்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பல சங்க நூல்கள் சைவ மடங்களில் இருந்துதான் வெளிக்கொண்டுவரப்பட்டவை. உ.வே.சா வாழ்க்கையைப் படித்தவர்கள் இதை அறியலாம். ஆனால் இவர் அந்த உண்மைகளை மறைத்து சைவ சமயமே தமிழுக்கு விரோதியாக இருந்தது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Slide25

[21] இந்த சங்கத்தைச் சேர்ந்த டி.செல்வராஜ் (டேனியல் செல்வராஜ்) எழுதிய நோன்பு என்கிற சிறுகதை பாடமாக 2012-2013ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டது. அதில் ஆண்டாள் தாசியின் மகள் என்று கதை எழுதினார். நமக்கு தெரியும். ஆண்டாள் துளசி செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்று. ஆனால் ஆண்டாளை கொச்சைப்படுத்தும் விதமாக இவர் எழுதினார்.

[22] அதேபோல சோலைசுந்தரபெருமாள் தாண்டவபுரம் என்ற நாவலை எழுதினார். அதில் திருஞானசம்பந்தரை கொச்சைப்படுத்தி எழுதினார். இவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்தான்.

[23] இதனுடைய தொடர்ச்சிதான் கரூரில் புலியூர் முருகேசன் கவுண்டர்களைப் பற்றி மிக மோசமாக எழுதியது. இவருக்கு பின்புலமாக இந்த சங்கம் இருக்கிறது. அதாவது யாரெல்லாம் இந்த பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக இயங்குகிறார்களோ அவர்களை ஆதரிப்பது, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது – இதையே ஒரு திட்டமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

[24] இந்த கம்யூனிச, திராவிட சித்தாந்த வாதிகள் கூட்டாக சேர்ந்து கும்மியடிக்கும் இடமாகத்தான் இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி இயங்கிவருகிறது. பட்டாசைக்கூட வெடிகுண்டு என்றுகூறி ஊடக தர்மத்தை மீறிவருகிறது இந்த தொலைக்காட்சி என்றால் இதனுடைய கருத்து சுதந்திரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கருத்து சுதந்திரம் – ஊடக சுதந்திரம் பற்றிப் பேச மேற்சொன்ன்னவ அரசியல், சித்தாந்த, ஊடக ஆசாமிகள் ஒருவருக்குக் கூட அதற்கான தார்மீக தகுதி என்பது சிறிதும் கிடையாது. இவர்கள் அத்தனை பேரும் இரட்டைவேடம் போடும் கபடதாரிகள் மட்டுமே.

பிப்ரவரி 8, 2015 அன்று திருச்செங்கோட்டில் "எது கருத்து சுதந்திரம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்தக் கருத்தங்கில் ம.வெங்கடேசன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

Leave a Reply