எனது சீன பயணத்தால், உறுதியான பலன்கள் கிடைக்கும்; இந்தியா- சீனா இருநாடுகளுக்கு இடையேயான உறவு, புதியநிலையை எட்டும்' என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பான 18வது சுற்று பேச்சு வார்த்தை, தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையடுத்து, மோடியை யாங்ஜிச்சி சந்தித்துப் பேசினார். அப்போது, சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இந்திய பயணத்தை நினைவு கூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, யாங் ஜிச்சியிடம் பிரதமர் தெரிவித்ததாக சீன அரசு செய்திநிறுவனமான "ஜின்ஹுவா' வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-சீனா இடையேயான உறவானது, இருநாட்டு தலைவர்கள் வகுத்த பாதையில் அதிவேகத்துடன் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனது சீன பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, ஆழமான கருத்துகளை அந்நாட்டு தலைவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

இந்தியா-சீனா இடையே வளர்ந்துவரும் நட்புறவு, இரு நாடுகளுக்கும் பலனளிப்பது மட்டுமன்றி, ஆசியாவிலும், உலகளவிலும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மோடி தெரிவித்தார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply