நிதிவழங்காத தில்லி அரசைக் கண்டித்து கிழக்கு, வடக்கு, தெற்கு உள்ளிட்ட 3 மாநகராட்சிகளின் மேயர்கள் தலைமையில் பாஜக மாமன்ற உறுப்பினகள் தில்லி சட்டப் பேரவை முன் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங்கை சந்தித்தும் தங்களின் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் கடும் நிதிச் சுமையில் சிக்கி தவித்து வருவதாகவும், அதிலிருந்து மீண்டுவரவும், மாநகராட்சி ஊழியர்களுக்கு உரியசம்பளம் வழங்கவும் நிதிவழங்க வேண்டும் என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மேயர்கள் மீனாட்சி (கிழக்கு), யோகேந்திர சந்தோலியா (வடக்கு), குஷி ராம் (தெற்கு)ஆகியோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், அப்போது நிதிவழங்க முடியாது என்றும், மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் கோரிக்கை வைக்கும் படியும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நிதிவழங்க மறுப்பு தெரிவித்த தில்லி அரசை கண்டித்து மூன்று மாநகராட்சி மேயர்கள் தலைமையில் துணைமேயர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், தில்லி பாஜக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் சட்டப் பேரவை முன் புதன் கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தில்லி சட்டப் பேரவை பாஜக தலைவர் விஜேந்திர குப்தாவும் பங்கேற்றார். அப்போது நிதிவழங்க மறுக்கும் தில்லி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கை சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிட்டு மாநகராட்சிக்கு உரியநிதியை ஒதுக்கீடுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply