காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க உடனடியாக தலையிடவேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  தமிழக எம்பிக்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணைகளைக் கட்டுவதற்கான தொழில்நுட்ப அறிக்கையை சர்வதேச நிறுவனங்களிடம் கர்நாடக அரசு கோரியது. இதன் அடுத்த கட்டமாக கர்நாடக சட்டப் பேரவையில் அணை கட்டுவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்த அணை கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

அதன்ஒரு கட்டமாக அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டமும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று மாலை 5.15 மணிக்கு ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டுக்குச் சென்றனர்.

அவரிடம் தமிழக எம்பிக்கள், மேகதாதுவில் கர்நாடக அரசு சட்ட விரோதமாக, காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டும். கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அவர்கள் பிரதமரிடம் கொடுத்தனர்.

Tags:

Leave a Reply