பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்ற தேசிய தலைவர் அமித்ஷாவின் கனவு நிறைவேறியுள்ளது. பாஜக உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது

நாடெங்கும் பாஜக.,வுக்கு உறுப்பினர் சேர்க்கும்பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப் படுத்த செல்போன்களில் மிஸ்டு கால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் வரவேற்புபெற்ற இத்திட்டத்தின் மூலம் லட்சக் கணக்கானவர்கள் பாஜக. உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இதுதவிர இணையதளம் மூலமாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் கவரப்பட்ட லட்சக் கணக்கானவர்கள் பாஜக.வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் பா.ஜ.க.வில் தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இது வரை உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது.

அந்தகட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தகட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாஜக. முதல் இடத்துக்கு வந்துள்ளது.

பாஜக.வுக்கு உறுப்பினர் சேர்க்கும்பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. நாளையுடன் உறுப்பினர் சேர்க்கை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பாஜக.வின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான கடைசி நாள் மேலும் சிலமாதங்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது. என்றாலும் பாஜக.வின் மொத்த உறுப்பினர்கள் தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வரும் 3, 4–ந் தேதிகளில் பெங்களூரில் நடக்கும் பாஜக. தேசிய செயற்க்குழு கூட்டத்தில் அறிவிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

நாட்டிலேயே உத்தர பிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒருகோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Tags:

Leave a Reply