பருவம் தவறிய மழைகாரணமாக பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுவரம்பை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், புந்திமாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவம் தவறியமழை காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தமாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட திமேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஜேட்லி கூறியதாவது:

பருவம் தவறியமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக, பயிர்ச்சேத இழப்பீட்டு வரம்பை மத்திய அரசு உயர்த்தவுள்ளது. அண்மையில் பெய்தமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும்.

புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு (விவசாயிகள்) மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.

பருவம்தவறிய மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவியும், நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.

மாநில அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் ஜேட்லி.

முன்னதாக, புந்திமாவட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருக்கு பயிர்ச் சேதம் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்தி எடுத்துக் கூறினார்.

Leave a Reply