காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டுப் பகுதியில் புதிய அணைகட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இது வரை அனுமதி கோர வில்லை என்று மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற உள்ள சுற்றுச் சூழல் அமைச்சர்கள் மாநாடு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க் கிழமை பேட்டியளித்தார்.

அப்போது, கர்நாடக அரசின் மேக்கே தாட்டுவில் அணைகட்டும் முயற்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்: "காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டுவில் கர்நாடக அரசு அணைகட்டுவது தொடர்பாக சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு அனுமதிகோரி முன் மொழிவுகள் ஏதும் வரவில்லை. பொதுவாக அணைகட்டுவது தொடர்பாக முன் மொழிவு வந்தால், அதற்காக உயர்நிலை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழு அணைகட்ட முன்மொழியப்பட்ட இடம் வனப்பகுதியில் உள்ளதா? அணையால் சுற்றுப்புறச் சூழல், வன விலங்குகளின் வாழிடம் பாதிக்குமா? என்பது பற்றியெல்லாம் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்யும். அதன் பிறகு அனுமதி வழங்கலாமா? என்பது பற்றி சுற்றுச் சூழல் துறை முடிவு எடுக்கும்' என்றார்.

மேலும், அவர் கூறியதாவது: "சுற்றுச்சூழல் தொடர்பான மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மா நாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்க உள்ளார். இதில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு, மின்னணு கழிவுகளை கையாளுவது, சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவது, புவிவெப்ப மாவதைத் தடுப்பது உள்பட சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்து மாநில சுற்றுச் சூழல் துறையின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர்' என்றார் ஜாவடேகர்.

Leave a Reply