முடிவெடுக்கும் நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறும், தங்களுக்குள் தகவல்தொடர்பில் இடைவெளி இருந்தால் அதை களையுமாறும் மத்திய அரசின் செயலர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசில் உள்ள அனைத்து துறைகளின் செயலர்களையும் பிரதமர் புதன் கிழமை சந்தித்து பேசினார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 10 மாதங்களில் செயலாளர்கள் ஆற்றிய பணிகளுக்காக அவர்களைப் பாராட்டினார்.

குறிப்பாக, நிலக்கரி சுரங்க ஏலம், ஜன்தன் திட்டம் ஆகியவற்றின் வெற்றியை பிரதமர் சுட்டிக் காட்டினார். செயலர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசிக்குமாறும், தகவல்தொடர்பில் இடைவெளி ஏதாவது இருந்தால் அதை களைவதோடு, முடிவெடுக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மத்திய கொள்கை குழுவின் துணை தலைவர் அரவிந்த் பானா கரியா, அக்குழுவின் உறுப்பினர் விவேக் தேவ்ராய், மத்திய அமைச்சரவைச் செயலாளர் அஜீத்சேத், பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர் பிகே.மிஸ்ரா ஆகியோரும் பங்கேற்றனர் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த ஜூன் 4ஆம் தேதி அனைத்து துறைகளின் செயலர்களையும் சந்தித்து அச்சமின்றி முடிவுகளை எடுக்குமாறும், அவர்களுக்கு தனதுஆதரவு எப்போதும் உண்டு என்றும் பிரதமர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply