காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் உரிமை கர்நாடகத்துக்கு இல்லை என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;

நேற்றைய நிலவரப்படி, 30 லட்சம் பேர் தமிழக பாஜக.வில் இணைந்துள்ளனர். உலகளவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக. வளரும். தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்று தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். எனவே, கால அவகாசத்துடன் இந்த மாதமும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. நிச்சயமாக இலக்கை அடைவோம்.

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முயன்றுவருகிறது. அதை தமிழக பா.ஜ.க.வும் கண்டிக்கிறது.

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் உரிமை கர்நாடகத்துக்கு கிடையாது. தடுப்பணை கட்டும் உரிமை தமிழகத்திற்குத் தான் உண்டு. எனவே, காவிரியில் வரும் நீர் கடலில் போய்கலக்காத வண்ணம் தமிழக அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதனை தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ''மத்திய அரசு, மாநில அரசுகளுக்கான நிதியை குறைத் துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதே?'' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ''மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்துகொடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்திற்கான நிதி எந்தவகையிலும் குறையாது'' என்றார்.

மேலும் நிருபர்கள் அவரிடம், ''தமிழக சட்ட மன்ற அடுத்த கூட்ட தொடரிலும் 6 தேமுதிக. உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்களே?'' என்றனர். அதற்கு பதிலளித்த அவர், ''சஸ்பெண்டு செய்யப்பட்டது முறையற்ற ஒன்று. எதிர்கட்சிகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டும்'' என்றார்.

Leave a Reply