பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி இந்தவாரத்தில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும் பயணம்

மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் தொடக்கத்தில் பிரான்ஸில் உள்ள டவுலோஸ் நகரத்திற்கு செல்கிறார். அப்போது அதிபர் பிராங்கோயிஸ் ஹோலன் டேவுடன், பிரதமர் மோடியின் விருப்பத் திட்டமான 100 ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் புதுச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐதராபாத், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களையும் ஸ்மார்ட்சிட்டியாக மேம்படுத்துவது குறித்தும் ஒப்பந்தங்கள் நிறைவேறும் என தெரிகிறது. இது குறித்து பிரான்ஸ் தூதர் பிராங்கோயில் ரிச்செய்ர் கூறுகையில், நகர்புற வளர்ச்சியில் இருநாடுகளும் இணைந்துவருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த இடங்களில் எல்லாம் புராதனத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே ஜப்பான் பயணத்தின்போது கியோட்டோ நகரின் உதவியுடன் வாரணாசியை மேம்படுத்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல் சீனா பயணத்தின் போது வதோதரா, புனே ஆகிய நகரங்களை ஸ்மார்ட்சிட்டியாக மாற்றுவது குறித்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பிரான்ஸ் பயணத்தின்போது டவுலோஸ் நகரத்தின் மாதிரியை பின்பற்றி புதுச்சேரி மேம்படுத்தப்படும். மேலும் இந்த பயணத்தின்போது முதல் உலக போரில் நவ் சாப்பெல் என்ற இடத்தில் உயிரிழந்த 9000 இந்திய வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ள லில்லே நகருக்கு சென்று பிரதமர் மோடி வீர வணக்கம் செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply