சிறு மற்றும் குறுதொழில் வளர்ச்சிக்கான முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கிவைத்தார். இந்தவங்கி மூலம் சிறுதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம்வரை கடன் வழங்கப்பட உள்ளது. நாட்டில் சிறு, குறுதொழில்கள் வளர்ச்சியடையவும், தொழில்

முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் முத்ரா என்ற வங்கியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்தவங்கிக்காக நிதி அமைச்சகம் ரூ.23,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், முத்ராவங்கியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த வங்கியின் மூலம் சிறு, குறு தொழில்களுக்கு கடன்பெறலாம்.

முத்ரா வங்கியின் முதலாவது கிளையை டெல்லியில் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது , "நாட்டிலுள்ள பெரியதொழில் நிறுவனங்கள் 1.25 கோடி மக்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை அளிக்கின்றன. சிறுதொழில் நிறுவனங்கள் சுமார் 12 கோடி மக்களை பணியில் அமர்த்தியுள்ளன.

நிதி கிடைக்கப் பெறாத சிறுதொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்குவதை நோக்கமாக கொண்டு முத்ரா வங்கி செயல்படும். காய்-கனி கடைக்காரர்கள் உள்ளிட்ட சிறுவணிகர்கள் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.

சிசு திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரையும் கடனுதவி பெறலாம். தருண் என்ற திட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்

நம் நாட்டில் சேமிப்புப் பழக்கத்தை வலுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இயற்கைச் சீற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மழைகுறைவு காரணமாகவும், இந்த ஆண்டு காலம்தவறிய மழை வெள்ளத்தாலும் விவசாயம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. பயிர்சேதங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் நேரடி பணிகளை மேற்கொள்வர்.

50 சதவீத பயிர்சேதத்துக்கு இழப்பீடு என்பது 33 சதவீதமாக குறைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கிடைக்கும்.

மேலும், பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை ஒன்றரை மடங்காக உயர்த்துவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், முன்பு ரூ.100 இழப்பீடு பெற்றவர்களுக்கு இனி ரூ.150 கிடைக்கும்; முன்பு ரூ.1 லட்சம் பெற்றிருந்தால், இப்போது ரூ.1.5 லட்சம் கிடைக்கும். அதாவது இழப்பீடு 50 சதவீதம் உயர்த்தப்படுகிறது" என்றார்

Leave a Reply