வாரணாசி கோயிலில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் முதல் முறையாக பிரபல பாகிஸ்தான் பாடகர் உஸ்தாத் குலாம்அலி பங்கேற்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசித்திபெற்ற 'சங்கத் மோச்சன்' கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இசைத்திருவிழா நேற்று கோலா கலமாகத் தொடங்கியது. வரும் 12ம் தேதிவரை நடைபெறும் இந்த இசை விழாவில், 50-க்கும் மேற்பட்ட பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்று விருந்து படைக்க உள்ளனர். இதில் முதல் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கஸல்பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்கிறார்.

மேலும், சரோட் மாஸ்டர் உஸ்தாத் அம்ஜத் அலிகான், அவரது மகன்கள் அமான், அயான், கதக்கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ், ஒடிசி நடனக் கலைஞர் சோனால் மான்சிங், தபலா கலைஞர் ஹஸ்மத் அலிகான் உட்பட பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்ததொகுதி வாரணாசி. எனவே, இந்த இசைநிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டசெய்தியில், ''இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மிகவும்விரும்பினேன். ஆனால், பணிச்சுமை காரணமாக இந்த முறை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறேன். பாகிஸ்தான் பாடகர் குலாம்அலி சாஹிப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்நிலையில் அவர் தனது இசைநிகழ்ச்சியில் நான் பங்கேற்பதை விரும்புவதாக செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். துரதிருஷ்டவசமாக இந்தமுறை என்னால் பங்கேற்க இயலவில்லை. எதிர்காலத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் போது பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கோயில் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply