தெலுங்கானாவில் தீவிரவாத இயக்கத்தலைவர் உள்பட 5 பேர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் 'சிமி' தீவிரவாத இயக்கம் தடைசெய்யப்பட்ட பின்பு, தெஹ்ரீக்–கல்பா–இஇஸ்லாம் என்னும் தீவிரவாத இயக்கத்தை தெலுங்கானாவில் தொடங்கியவர், விகாருதீன் அகமது (வயது 35). இவர், தெலுங்கானா மாநிலம் மலாக் பேட் பகுதியைச் சேர்ந்தவர்.

குஜராத்மாநிலம் ஆமதாபாத் நகரில் 2007–ம் ஆண்டு போலீஸ்காரர் ஒரு வரையும், 2008–ல் பலாக்நுமா என்னுமிடத்தில் ஊர்க்காவல்படை வீரரையும், 2010–ம் ஆண்டு ஐதராபாத்தின் சலிபண்டா பகுதியில் ஒரு போலீஸ் காரரையும் சுட்டுக் கொன்றதாகவும் இவர்மீது வழக்குகள் உள்ளன.

ஆமதாபாத் சம்பவத்தில், அப்போதைய குஜராத் முதல்மந்திரியும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதில் விகாருதீன் முக்கியபங்கு வகித்தவர் ஆவார்.

விகாருதீன் அகமதுவின் கூட்டாளிகள் பல்வேறுகொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். 2008ம் ஆண்டு முதல் தலை மறைவான விகாருதீனும், அவருடைய கூட்டாளிகளான அம்ஜத், அசீப், சுலைமான், ஜாகீர் ஆகியோரும் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 14–ந் தேதி ஐதராபாத் நகரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது சிக்கினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் வாரங்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருகொலை வழக்கு விசாரணைக்காக 5 பேரையும் தெலுங்கானா போலீசார், பலத்தபாதுகாப்புடன் ஒரு வேனில் ஐதராபாத் நாம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்து கொண்டிருந்தனர். அந்த வேனுக்கு பாதுகாப்பாக பின்னால் மற்றொரு வேனில் 17 போலீசார் வந்தனர்.

ஐதராபாத்தில் இருந்து 80 கிமீ. தொலைவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஜனாகன் என்னுமிடத்தில் தீவிரவாதிகளை ஏற்றியவேன் வந்தபோது அதில் இருந்த தீவிரவாதிகள் திடீரென போலீசாரை தாக்கினர். மேலும் போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளையும் தீவிரவாதிகள் பறித்துக்கொண்டனர். போலீசாரை சுடத் தொடங்கிய அவர்கள் கீழே இறங்கி தப்பியோடவும் முயன்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த, பின்னால் வந்த வேனில் இருந்த போலீசார் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக வானத்தைநோக்கி சுட்டனர்.

எனினும், தீவிரவாதிகள் போலீசாரை சுடும் தங்களது முயற்சியை நிறுத்த வில்லை. இதனால் போலீசார் தற்காப்புக்காக தீவிரவாதிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தெஹ்ரீக் கல்பா இயக்கத் தலைவர் விகாருதீனும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் உடலில் குண்டுகள்பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கடந்த சனிக்கிழமை நல்கொண்டா மாவட்டத்தின் ஜானகி புரத்தில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சிமி இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இந்த நிலையில்தான் தெஹ்ரீக் கல்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவரும், அவருடைய கூட்டாளிகளும் வாரங்கல் அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

Tags:

Leave a Reply