இந்துத்துவா கொள்கைகளை செயல் படுத்துவதற்காக விராட் ஹிந்துஸ் தான் சங்கம் என்ற புதிய இந்து அமைப்பை சுப்பிரமணியன் சுவாமி தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமர்கோயில் கட்டுவது உள்ளிட்ட இந்துத்துவா பிரச்னைகளில் பாஜக.,வுக்கு இந்த அமைப்பு அழுத்தம்தரும். மேலும் இது சங் பரிவார் அமைப்புடன் சேர்ந்துபணியாற்றும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ராமர் கோயில் பிரச்னையைக் கையில் எடுக்க உள்ளோம். இந்த பிரச்னையில் முஸ்லிம்கள் மசூதிகட்டுவதற்கு சரயு நதிக்கரை பகுதியில் ஓர் இடத்தை ஒதுக்கிவிடலாம். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் இந்த பிரச்னையில் அரசுக்கு அழுத்தம் தருவது ஆகியவற்றின் மூலம் அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று நம்புகிறோம்.

பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அரசியலமைப்பு சட்டம் 370-ஐ ஒழிப்பது. வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலுக்குள் அதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களின் இந்த அமைப்பு இந்துக்களுக்கு மட்டுமானதல்ல. இந்து பாரம்பரியத்தை ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் இந்த அமைப்பில் இடமுண்டு. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Leave a Reply