தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிட கழகதலைவர் கி.வீரமணி திருட்டுத் தனமாக நடத்தியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்ராஜா கண்டனம் தெரிவித்தார்.

திராவிடர்கழகம் சார்பில் வேப்பேரி பெரியார் திடலில் தாலியகற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இந்தத்தகவல் கிடைத்ததும் இந்து முன்னணியினர் எதிர்ப்புதெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக பெரியார் திடலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து இந்த இடத்துக்கு பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜாவும் வந்து போராட்டத்தில் பங்கேற்றார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் அமைதிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:

தாலி அகற்றும் நிகழ்ச்சி கடும் கண்டத்துக் குரியது. 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு, முன் கூட்டியே காலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். திருட்டுத் தனமாக நடைபெறும் திரு மணங்களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திருட்டுத் தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சியை இப்போதுதான் கேள்விப் படுகிறோம். இந்நிகழ்ச்சியை நடத்திய கி.வீரமணியை கண்டிக்கிறேன் என்று கூறினார்.

இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியதாவது: வீரம் இல்லாத வீர மணி நான்கு சுவர்களுக்குள் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நிகழ்ச்சியை பொதுஇடத்தில் வைத்து அவர் நடத்த தயாரா? ஏதாவது ஒருகுடிசை பகுதிக்கு சென்று இந்த நிகழ்ச்சியை நடத்திபார்க்கட்டும். அப்போது என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பது தெரியும் என்றார்.

Leave a Reply